அரசு மேல்நிலை பள்ளியில் நீட் பயிற்சி மையம் அமைக்க வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி
அரசு மேல்நிலை பள்ளியில் நீட் பயிற்சி மையம் அமைக்க வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி
UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 07, 2024 09:41 AM
மதுரை:
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அரசு மேல்நிலை பள்ளியில் நீட் பயிற்சி மையம் அமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.உத்தமபாளையம் லோயர்கேம்ப் அரசு மேல்நிலை பள்ளி பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் லோயர்கேம்ப் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கின்றனர். நீட் தேர்வு பயிற்சி மையம் அமையும் பள்ளிகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில் லோயர்கேம்ப் அரசு பள்ளியும் இடம் பெற்றது. பயிற்சிக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர்.ஆனால், கம்பம் தனியார் பள்ளிக்கு பயிற்சி மையத்தை மாற்றினர். காணொலி காட்சி உட்பட பல்வேறு வசதிகளுடைய லோயர்கேம்ப் அரசு பள்ளியில் நீட் பயிற்சி மையத்தை துவக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு:
அனைத்து போட்டி மற்றும் நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியானது. பதிவு விபரங்களின்படி 75 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கம்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பெரும்பான்மையான மாணவர்களின் வசதிக்காக கம்பத்திலுள்ள ஒரு பள்ளியில் மையம் துவக்கப்பட்டது. இது 2017 நவம்பர் முதல் செயல்படுகிறது.பயிற்சி மையம் துவங்கிய பின் மனுதாரர் இங்கு மனு செய்தார். தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்:
மனுவை விசாரிக்க விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவை ஏற்படின் தகுந்த நேரத்தில் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரி பரிசீலிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்டனர்.