பணியிட மாறுதலுக்கு சிபாரிசு தேடாதீர்கள்; டாக்டர், நர்ஸ்களுக்கு அறிவுரை
பணியிட மாறுதலுக்கு சிபாரிசு தேடாதீர்கள்; டாக்டர், நர்ஸ்களுக்கு அறிவுரை
UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 08:46 AM
சென்னை:
டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர், பணியிட மாறுதலுக்கு எவ்வித சிபாரிசையும் தேட வேண்டாம் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை கிண்டியில் உள்ள, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில், புதிய டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். 1,021 டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியிடங்களை தேர்வு செய்தனர்.பின், சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது முதல், பல்வேறு நீதிமன்ற வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவற்றில் தீர்வு ஏற்படுத்தப்பட்டு, கொரோனா கால டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் அளிக்கப்பட்டு, 1,021 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொது கவுன்சிலிங் வாயிலாகவே பணி நியமனம் நடந்தது. சிலருக்கு விரும்பிய இடம் கிடைத்திருந்தால், மகிழ்ச்சியாக பணியாற்றுங்கள்; விரும்பாத இடம் கிடைத்திருந்தால், மிக மிக மகிழ்ச்சியாக பணியாற்றுங்கள்.எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், யாரிடமும் சிபாரிசுக்கு செல்லாதீர்கள். ஓராண்டு காலம் மக்களுக்கு சேவையாற்றுங்கள். அதன்பின், பொது கலந்தாய்வில் விரும்பிய இடங்களில் பணியாற்றலாம்.தற்போது, 983 மருந்தாளுனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அவர்களுக்கு, கொரோனா கால ஊக்க மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. அதேபோல், 1,266 சுகாதார ஆய்வாளர்கள், 2,271 கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட, 6,000த்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்பட உள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளில் சித்தா டாக்டர்கள், பல் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், டாக்டர்களின் பல ஆண்டு கால கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.