UPDATED : பிப் 23, 2024 12:00 AM
ADDED : பிப் 23, 2024 07:20 AM
கோத்தகிரி:
கோத்தகிரி ஒன்னதலை அரசு ஆங்கிலவழி தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது.பள்ளி ஆசிரியர் பாபு வரவேற்றார். ஊர் தலைவர் லிங்கன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கோமதி, சிறந்த மேலாண்மை குழு பள்ளிக்கான விருதை வழங்கி பேசுகையில், மாணவர்கள் நன்றாக படித்து வாழ்வில் உயர வேண்டும். குறிப்பிட்ட பாடம் வராது, வேறு பாடத்தை பயிலுமாறு ஆச்சரியர்களும், பெற்றோரும் கூறினால், அதனை தவிர்த்து, குறிப்பிட்ட பாடத்தையே பயின்று தேர்ச்சி பெற்று, அவர்கள் முன் நிற்கவேண்டும்.அப்போதுதான், தனி திறமை வெளிப்படும். மாணவர்கள் படித்த பள்ளியிலேயே எதிர்காலத்தில் ஆசிரியராக சேருவது பெருமையாகும். இன்றைய சிறந்த மாணவர்கள்கள்தான், நாளை மேடைகளில் அலங்கரிக்கப்படுவர். மாணவர்கள், வைராக்கியத்துடன் படித்து, வைரமாக ஜொலிக்க வேண்டும் என்றார்.கோத்தகிரி சிவகாமி எஸ்டேட் குழும உரிமையாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், அரசு பள்ளிகளில் திறமையான ஆசிரியர்கள் மூலம், கல்வி போதிக்கப்படுகிறது. சீருடை முதற்கொண்டு, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.அதனால், பெற்றோர் தங்களது குழந்தைகளை, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும். பள்ளிக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், செய்து தரப்படும் என்றார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. சிறந்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில், உதவி கல்வி அலுவலர் வனிதா, கிராம கல்வி குழு தலைவர் பெள்ளா கவுடர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி, சமூக ஆர்வலர் விஸ்வநாதன், கிராம பிரமுகர்கள் லக்கன் மற்றும் பசுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார்.