நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல்: உயர்நீதிமன்றம் உத்தரவு
நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல்: உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : மார் 01, 2024 12:00 AM
ADDED : மார் 01, 2024 05:08 PM
மதுரை:
நுாலகங்களுக்கு 2020-23 க்குரிய பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்களை 6 மாதங்களில் கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பூதிப்புரம் வழக்கறிஞர் ராஜசெல்வன் 2017ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
கிராமப்புற, நகர்ப்புற நுாலகங்களுக்கு 75 சதவீதம் தமிழ் புத்தகங்கள், 25 சதவீதம் ஆங்கில புத்தகங்களை தேர்வுக்குழு கொள்முதல் செய்ய வேண்டும். இதில் இலக்கியம், பொது அறிவு, வரலாறு, அறிவியல், சட்டம் உட்பட பல்வேறு புத்தகங்கள் குறிப்பிட்ட சதவீதம் அடங்கும்.மக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி வசூலிக்கின்றன. அதில் 10 சதவீத வரியை (செஸ்) பொது நுாலகத்துறைக்கு உள்ளாட்சி அமைப்புகள்செலுத்த வேண்டும். செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதால் நுாலகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிய வில்லை. புத்தகங்களை கொள்முதல் செய்ய முடியவில்லை.நுாலக வரியை செலுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தோம். 2017 மார்ச் 3ல் நீதிபதிகள், நுாலக வரியை அந்தந்த மாவட்ட நுாலக நிர்வாகத்திடம் 6 மாதங்களில் செலுத்த, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதை அரசு நிறைவேற்றவில்லை.நுாலகங்களில் போதிய புத்தகங்கள் இல்லாததால் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியவில்லை. கிராம மற்றும் நகர்ப்புற நுாலகங்களுக்கு பொது அறிவு, சட்டப் புத்தகங்களை கொள்முதல் செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை செயலர், பொதுநுாலகத்துறை இயக்குனர், புத்தக தேர்வுக்குழு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.தனபால் அமர்வு:
2019 வரை புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. நுாலகங்கள் அவசியமானது. அதன் மூலம் இளைய தலைமுறை அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியும். நுாலக வரி (செஸ்) வருவாய் மூலம் 2020-23 க்குரிய புத்தகங்களை 6 மாதங்களில் கொள்முதல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

