UPDATED : மார் 02, 2024 12:00 AM
ADDED : மார் 02, 2024 09:27 AM
மதுரை:
பிளஸ் 2 தமிழ் தேர்வு எதிர்பார்த்தது போல் மிக எளிதாக இருந்தது. இந்தாண்டு பொதுத் தேர்வு மகிழ்ச்சியுடன் துவங்கியது என மாணவர்கள் தெரிவித்தனர்.மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
ஆரம்பமே அசத்தல்
பிரியதர்ஷிணி, ஸ்ரீமகா பள்ளி:
ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 14 வினாக்களும் எளிதாக இருந்தன. அனைத்தும் புக்பேக்கில் இருந்தே இடம் பெற்றன. இரண்டு மதிப்பெண் வினாக்களும் எளிதாகவே இருந்தன. மனப்பாடம் பகுதி புறநானுாறு பகுதியில் கேட்கப்பட்டது. இது பலமுறை திருப்புதல் தேர்வுகளில் எழுதிப்பார்த்து, படித்த பகுதி என்பதால் அனைத்து மாணவர்களும் எளிதில் முழு மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தமிழில் சென்டம் பெறுவது எளிது. பொதுத் தேர்வு மகிழ்ச்சியான துவக்கத்தை தந்துள்ளது.இரட்டிப்பு மகிழ்ச்சி
கீர்த்தனா தேவி, ஜோதி மேல்நிலை பள்ளி:
வினாத்தாள் எளிமை. ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் மட்டும் பாடத்திற்குள் இருந்து கேட்கப்பட்டிருந்தன. அதுவும் எளிது தான். 6 மதிப்பெண்களுக்கான நெடுவினாக்கள் பகுதியில் கொடுக்கப்பட்ட சாய்ஸ் வினாவும் எளிதாக இருந்தது. இலக்கியம், உரைநடை, துணைப்பாடம் பகுதி என அனைத்து மாணவர்களும் பலமுறை எழுதியதாகவும், அடிக்கடி ஆசிரியர்கள் சுட்டிக்காட்டிய வினாக்களாகவே கேட்கப்பட்டிருந்தன, இரட்டிப்பு மகிழ்ச்சி.கை கொடுத்த கையேடு
காவிய பிரியா, சுந்தரேஸ்வரா வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, மேலுார்:
எதிர்பார்த்தது போல் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் 2 மதிப்பெண் பகுதியில் இரண்டு வினாக்கள் சற்று கடினம். இலக்கிய நயம் பாராட்டு, திருக்குறள், மனப்பாடம் பகுதி என காலாண்டு, திருப்புதல் தேர்வுகளில் அடிக்கடி வந்து எழுதிப்பார்த்தவையாக இருந்ததால் எளிதில் விடையளிக்க முடிந்தது. இலக்கணப் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட 37 மதிப்பெண்களுக்கான வினாக்களில், 30 மதிப்பெண்களுக்கு சாதாரண மாணவர்களும் விடையளிக்கும் வகையில் இருந்தது. கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்கிய சிறப்பு கையேடு பயனுள்ளதாக இருந்தது.புக்பேக் வினாக்கள் அதிகம்
ராகுல் கணேஷ், லார்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, டி.கல்லுப்பட்டி:
பொதுத் தேர்வு என்பதால் கொஞ்சம் அசாதாரண மனநிலையுடன் தான் தேர்வறைக்குள் சென்றேன். ஆனால் வினாத்தாளை பார்த்தவுடன் நம்பிக்கை ஏற்பட்டது. நெடுவினாக்கள், இரண்டு மதிப்பெண் வினாக்கள் என பெரும்பாலும் புக்பேக்கில் இருந்தே வந்திருந்தன. 95 மதிப்பெண்கள் வரை எளிதில் பெறமுடியும். இந்தாண்டின் பொதுத் தேர்வு துவக்கம் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.சென்டம் அள்ளலாம்
முத்துலட்சுமி, தமிழாசிரியை, பாரப்பத்தி அரசு மேல்நிலைப் பள்ளி:
பள்ளிகளில் நடத்தப்பட்ட வாரத் தேர்வுகளில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் இத்தேர்வில் இடம் பெற்றிருந்ததால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மொத்தம் செய்யுள் 33, உரையாடல் 54, இலக்கணம் 37, துணைப்பாடம், மனப்பாடம் பகுதிகளில் தலா 6 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன. இதில் ஒரு மதிப்பெண் பகுதியில் 14, இரண்டு மதிப்பெண் வினாக்களில் 24, நான்கு மதிப்பெண் பகுதியில் 28 உட்பட பெரும்பாலான மாணவர்கள் 90 மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் சமமாகவே கேட்கப்பட்டுள்ளன. சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் 60ம், நன்றாக படிக்கும் மாணவர்கள் சென்டம் மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் அதிகம்.

