அரசு பள்ளி அட்மிஷன் அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
அரசு பள்ளி அட்மிஷன் அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
UPDATED : மார் 03, 2024 12:00 AM
ADDED : மார் 03, 2024 09:13 AM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு மார்ச் மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து அரசு துறையினருக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சப் கலெக்டர் சவுமியா, எஸ்.பி., அபிஷேக்குப்தா, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசுகையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக, வரும் மார்ச் மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கு, அனைத்து அரசுத்துறை அலுவலர்களின் உதவி, கல்வித்துறைக்கு அவசியமாகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் 1ம் தேதி துவங்குகிறது. தேர்வு நடைபெறும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், துாய்மை பணிகள் மேற்கொள்ளவேண்டும் என்றார்.கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் துவங்கப்பட்ட பல பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன; அப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி கடிந்துகொண்டார்.கலெக்டர் பேசியதாவது:வரும் 2024 - 25 கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை சிறப்பான விகிதத்தில் உயர்த்த வேண்டும். இதற்கான பணிகளை அரசு அலுவலர் அனைவரும் சிறப்பாக மேற்கொள்ளவேண்டும்.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது தொடர்பான விளம்பர போர்டுகள் வைக்கலாம். பஸ் ஸ்டாண்டில் உள்ள டிஜிட்டல் போர்டிலும், மாணவர் சேர்க்கை தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பலாம்.பொதுத்தேர்வு நடைபெறும் அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில், தடையில்லாத மின்சாரம், அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விதிமீறல் மருந்தகங்கள்
நடவடிக்கை உறுதி மருந்தாய்வாளர்கள், உணவு பாதுகாப்பு, போலீசார் கூட்டாக ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் மருந்தகங்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவேண்டும். எத்தனை பேர் தவறு செய்தாலும் சரி, அத்தனை பேரும் நடவடிக்கைக்கு உள்ளாகவேண்டும் என்றார் கலெக்டர்.

