ரோபோக்களை புட்பால் விளையாட வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்!
ரோபோக்களை புட்பால் விளையாட வைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்!
UPDATED : மார் 04, 2024 12:00 AM
ADDED : மார் 04, 2024 09:15 AM
அரசூர்:
ரோபோக்களை உருவாக்குதல் குறித்த போட்டிகளில், அரசூர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.ஜி.டி., அறக்கட்டளை சார்பில், மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆய்வுத்திறனை ஊக்குவிக்க, ரோபோக்களை ஈடுபடுத்தும் மூன்று வகை போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளுக்கு மத்தியில், மூன்று அரசுப்பள்ளிகளில் இருந்து மட்டுமே, மாணவர்கள் பங்கேற்றனர்.ஒரு கால்பந்தை எதிரெதிர் அணியில், இரு ரோபோக்களை மோதவிட்டு, எது முதல் கோல் போடுகிறது என போட்டி அறிவிக்கப்பட்டது. இதில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் முறையே அழகுபாண்டி, நந்தா, விஸ்வநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இதேபோல், நேர்கோட்டில் வேகமாக ரோபோக்கள் செல்லுதல், ரோபோகார் பந்தய போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் கூறுகையில், ஜி.டி.அறக்கட்டளை சார்பில், எங்கள் பள்ளிக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்டெம் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.இதை மாணவர்களுக்கு சொல்லித்தர, பிரத்யேக ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக, அறக்கட்டளை நடத்திய மூன்று போட்டிகளிலும் எங்கள் பள்ளி மாணவர்கள், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் என்றார்.

