UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:42 PM
பெங்களூரு:
நமது கல்வி நிறுவனங்கள், நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு உலகத்தரத்தில் திறன், அறிவையும் வழங்க வேண்டும், என கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவுறுத்தினார்.பெங்களூரில் நேற்று நடந்த கர்நாடகா திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவர்னர் தாவர்சந்த் கெலாட் கவுரவித்தார்.பின் அவர் பேசியதாவது:
நாட்டை அறிவுசார் வல்லரசாக மாற்றுவதில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் மாணவர்களை துாண்டுவதன் மூலம், இதனை அடைய முடியும்.கவுரவ டாக்டர் பட்டம்
பட்டமளிப்பு விழாவில், பல துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்த இவர்களுக்கு, பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளித்துள்ளது.அறிவு, அறிவியல், கல்வியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பண்டைய காலத்தில், நமது கல்வி முறையானது தனி நபரின் முழு வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.வாழ்க்கையின் வெற்றியில் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டின் எதிர்காலம், வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். சுதந்திரம் பெற்ற பின், இதுவரை இல்லாத வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.நமது கல்வி நிறுவனங்கள், நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு உலகத்தரத்தில் திறனையும், அறிவையும் வழங்க வேண்டும்.தேசிய நோக்கங்கள்
கர்நாடகா திறந்த நிலை பல்கலைக்கழகம், அதன் தொடக்கத்தில் இருந்து உயர்கல்வி மூலம் தேசிய நோக்கங்களை அளிப்பதில் உறுதியாக உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அனைத்து வயதினருக்கும் தொலைதுார கல்வி மூலம் பட்டப்படிப்பை தொடர வாய்ப்புகளை வழங்குகிறது. சமீபத்தில் 67 வயது முதியவருக்கு பட்டம் வழங்கி, கல்வி சாதனைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர்பேசினார்.

