UPDATED : மார் 05, 2024 12:00 AM
ADDED : மார் 05, 2024 10:44 PM
சென்னை:
பிளஸ் 1 தமிழ் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.இதில், 4,945 தனி தேர்வர்கள் உள்பட, 8 லட்சத்து, 25,187 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 9,844 பேர் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகினர். முறைகேடு புகாரில், சேலம் மற்றும் ராமநாதபுரத்தில் தலா ஒருவர் பிடிபட்டனர்.நேற்றைய தமிழ் வினாத்தாள், விடை எழுத மிகவும் கடினமாக இருந்ததாக, ஆசிரியர்களும், மாணவர்களும் புகார் தெரிவித்தனர். குறிப்பாக, ஒன்று, இரண்டு மற்றும் நான்கு மதிப்பெண் வினாக்களில் பெரும்பாலானவை பயிற்சி வினாக்களாக இல்லாமல், புத்தகத்தின் உள்பகுதி பாடங்களில் இருந்து எடுக்கப்பட்ட புதிய வினாக்களாக இருந்துள்ளன. இதனால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

