UPDATED : மார் 06, 2024 12:00 AM
ADDED : மார் 06, 2024 09:47 AM
திருப்பூர்:
திருப்பூரில் நான்கு நாட்கள் நடந்த, நிட்-டெக் கண்காட்சியை, 27 ஆயிரத்து, 500 பேர் பார்வையிட்டுள்ளனர்; மொத்தம், 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது.ஹை-டெக் டிரேடு அண்ட் டெக்னிக்கல் கன்சல்டன்சி சார்பில், 17 வது நிட்-டெக் கண்காட்சி, திருமுருகன்பூண்டி கண்காட்சி மைதானத்தில், நான்கு நாட்கள் நடந்தது. பருத்தி மற்றும் செயற்கை நுாலிழையில் இருந்து, துணியை உற்பத்தி செய்யும் நிட்டிங் மெஷின்களை, 16 நிறுவனங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. மூன்று லட்சம் ரூபாயில் துவங்கி, 1.50 கோடி ரூபாய் வரையிலான இயந்திரங்கள், 325 ஸ்டால்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.ஜெர்மன் நாட்டை சேர்ந்த நிறுவனம், ஜீரோ டிஸ்சார்ஜ் நோ சால்ட் டையிங் வசதியுடன் கூடிய சாயமிடும் இயந்திரத்தை அறிமுகம் செய்தது. ஜப்பான், இத்தாலி நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், துணிகளை கட் செய்யும் நவீன இயந்திரங்களை அறிமுகம் செய்திருந்தன.இதன் வாயிலாக, 7 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்துள்ளது. பிரின்டிங்கை பொறுத்தவரை, சப்ளிமேஷன், டிஜிட்டல், ரோட்டரி, பாடி பிரின்டிங் மற்றும் மேனுவல் ரோட்டேஷன் உள்ளிட்ட அனைத்து வகை பிரின்டிற்கு தேவையான இயந்திரங்களும் கண்காட்சியில் உள்ளன.இதுகுறித்து நிட்-டெக் கண்காட்சியின் தலைவர் ராயப்பன் கூறியதாவது:
நிட்-டெக் கண்காட்சி, பின்னலாடை தொழில்துறையினர் பெரும் வரவேற்பை பெற்றது. பயன்பாட்டில் உள்ள இயந்திரங்களில் இருந்து, 40 சதவீதம் அளவுக்கு, தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட இயந்திரங்கள், கண்காட்சியில் விற்பனையாகின.தொழில்துறையினர் மட்டுமல்ல, தொழில் முனைவோராகவும் ஆர்வத்துடன், பொறியியல் கல்லுாரி மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லுாரி மாணவ, மாணவியரும், ஆசிரியர்களுடன் வந்து பார்வையிட்டு பயனடைந்துள்ளனர்.கண்காட்சியில், மொத்தம், 27 ஆயிரத்து, 500 பேர் பார்வையிட்டுள்ளனர். 500 கோடி ரூபாய்க்கு வர்த்தக விசாரணை நடந்துள்ளது. இதுவரை நடந்ததில், இந்த கண்காட்சி பனியன் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பங்கேற்ற நிறுவனங்களும், எதிர்பார்த்ததை விட கூடுதலாக வர்த்தக விசாரணை நடந்துள்ளதாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

