விடுமுறையை அனுசரித்து பட்டய படிப்பு பயிற்சி வகுப்பு நடத்த கோரிக்கை
விடுமுறையை அனுசரித்து பட்டய படிப்பு பயிற்சி வகுப்பு நடத்த கோரிக்கை
UPDATED : மார் 08, 2024 12:00 AM
ADDED : மார் 08, 2024 04:09 PM
ராசிபுரம்:
கூட்டுறவு சங்க ஊழியர்களின் விடுமுறையை அனுசரித்து, பட்டய படிப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த கூட்டுறவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில், ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வழங்கப்படுகிறது. வெளி மாணவர்கள் முழு நேரமாகவும், ரேஷன் கடை உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் பகுதி நேரமாகவும் இப்பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. பகுதிநேர பயிற்சி என்பது, கூட்டுறவில் பணிபுரியும் ஊழியர்களின் விடுமுறையை அனுசரித்து இப்பயிற்சி வகுப்புகள் நடக்கும்.மாதத்தில், முதல் இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் மாதத்தின் கடைசி இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சி வழங்கப்படும். இதனால், ஊழியர்களும் எவ்வித பிரச்னையுமின்றி பட்டய படிப்பை முடிக்க முடிந்தது. ஆனால், இந்தாண்டு முதல் முறையாக அனைவருமே பகுதி நேரத்தில் பட்டய படிப்பு படிக்கலாம் என்ற முறையை அறிவித்தனர். இதனால், எப்போதும் இல்லாத அளவிற்கு, 400க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பில் இணைந்தனர்.இதன் காரணமாக, சனி, ஞாயிறு என வாரத்தில் இரண்டு நாட்கள் பகுதி நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பகுதி நேர படிப்பு அனைவரும் படிப்பதால், கூட்டுறவு ஊழியர்கள் விடுமுறையை கணக்கில் எடுப்பதில்லை. இதனால், ஊழியர்களால், 100 சதவீதம் வகுப்பிற்கு செல்ல முடிவதில்லை. பகுதி நேர பட்டய படிப்பில் ரேஷன் கடை ஊழியர்கள் தான் அதிகளவு விடுமுறை எடுத்துள்ளனர். தற்போது, 80 சதவீதம் வருகை இல்லை என்றால் தேர்வு எழுத கட்டாயம் அனுமதிக்க முடியாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயிற்சி நிறுவன முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.இந்நிலையில், கூட்டுறவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் ரங்கசாமி ஆகியோர் கூட்டுறவு மேலாண்மை நிறுவனத்திற்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், ரேஷன் கடை உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களின் விடுமுறையை அனுசரித்து பகுதி நேர வகுப்புகள் நடத்த வேண்டும். இல்லை என்றால் பட்டய படிப்பு படிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்படுவர்&' என, குறிப்பிட்டுள்ளனர்.

