மாணவியரின் மேல்படிப்பிற்கு வசதி அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் நேசம்
மாணவியரின் மேல்படிப்பிற்கு வசதி அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் நேசம்
UPDATED : மார் 13, 2024 12:00 AM
ADDED : மார் 13, 2024 09:33 AM
ஆரணி:
போக்குவரத்து வசதியின்றி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்பை தொடர முடியாத மாணவியரை கண்டறிந்து, அவர்களுக்கு ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்த அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.ஆரணி அருகே ஒரு பக்கம் காப்பு காடு, மறுபக்கம் ஆரணி ஆறு என்ற சூழலில் அமைந்துள்ளது எருக்குவாய் கிராமம்.அந்த கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் அதன்பின், படிப்பு தொடர வேண்டும் என்றால், 8 கி.மீ., தொலைவில் உள்ள ஆரணிக்கு செல்ல வேண்டும். எந்த ஒரு போக்குவரத்து வசதியும் அந்த கிராமத்திற்கு கிடையாது.அதனால், பள்ளி மேல் படிப்புக்கு செல்லும் மாணவர்கள், 5 கிலோ மீட்டர் நடந்து சென்று, பெரியபாளையம், ஆரணி சாலையில், ஷேர் ஆட்டோ அல்லது பேருந்து பிடித்து பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.மழைக்காலங்களில், ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் போது, 16 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற போக்குவரத்து சிக்கல்களால், எருக்குவாய் கிராமத்தில், சில மாணவியர், பள்ளி மேல் படிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டது.மாணவியரின் கல்வி பாதிக்க கூடாது என்ற எண்ணத்தில், எருக்குவாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக சில தனிநபர்களின் உதவியோடு இலவச ஷேர் ஆட்டோ வசதியை ஏற்பாடு செய்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதற்கான மாத தொகை ஆட்டோ டிரைவருக்கு வழங்கப்படுகிறது. எருக்குவாய் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவியர், தினசரி அந்த ஷேர் ஆட்டோவில் ஆரணியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.மாணவியர் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்பை தொடர, சொந்த முயற்சியில் சிறப்பு ஏற்பாடு செய்த நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை எருக்குவாய் கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இது குறித்து தலைமை ஆசிரியர் சண்முகம் கூறியதாவது:
எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவியர், போக்குவரத்து பிரச்னையால், படிப்பை தொடர முடியாத நிலையில் இருந்தனர்.பெண்கள் படிப்பின் அவசியத்தை அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்து கூறி, அவர்கள் மீண்டும் கல்வியை தொடர, அனுமதி பெற்றேன். தனியார் சிலரின் நிதி உதவியுடன், ஷேர் ஆட்டோ ஏற்பாடு செய்து, பள்ளி மாணவியரை பாதுகாப்பாக, ஆரணி பள்ளிக்கு அனுப்பி வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 30 மாணவியர் பயன் பெறுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.எம்.தேவி, 9ம் வகுப்பு, எருக்குவாய்:
கல்வியின் அவசியத்தை என் வீட்டினர் உணர்ந்த போதும், போக்குவரத்து வசதியில்லாத சூழலில், ஷேர் ஆட்டோ மட்டும் இல்லை என்றால், எட்டாம் வகுப்புக்கு மேல் என்னால் படித்திருக்க முடியாது.அ.ரேகா, எருக்குவாய்:
என் மகள் பள்ளி செல்வதற்கு, 5 கி.மீ., நடந்து சென்று பேருந்து அல்லது ஷேர் ஆட்டோ பிடிக்க வேண்டும். பாதுகாப்பற்ற சூழலில் தற்போது தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்த ஷேர் ஆட்டோவை வரமாக கருதுகிறோம்.