தங்கவயலில் தொழில் பூங்கா 668 ஏக்கர் நிலம் ஒதுக்கி உத்தரவு
தங்கவயலில் தொழில் பூங்கா 668 ஏக்கர் நிலம் ஒதுக்கி உத்தரவு
UPDATED : மார் 16, 2024 12:00 AM
ADDED : மார் 16, 2024 09:38 PM
தங்கவயல்:
தங்கவயலில் தொழிற்பூங்கா அமைக்க, கர்நாடக அரசு 668 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.தங்கவயல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தங்கவயலில் தொழிற்சாலை உருவாக வேண்டும் என்பது என் கனவு திட்டம். தங்கவயலில் வேலை இல்லாத நிலைமையை போக்க வேண்டும். அதற்காகவே, தங்கவயல் மக்கள், என்னை எம்.எல்.ஏ., ஆக்கினர்.இதற்காக கர்நாடக சட்டசபையில் பேசினேன்; அதற்காக தேவையான நிலம் கண்டறியப்பட்டது. வருவாய்த் துறை, தொழில் வளத்துறை அமைச்சர்களை வரவழைத்து பெமலின் 50 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த நிலத்தை ஆய்வு செய்தனர்; சர்வே நடத்தினர்.அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. தொழிற்பூங்கா அமைக்க 668 ஏக்கர் நிலம் ஒதுக்கியதாக அரசாணை வெளியிடப்பட்டது. இது தங்கவயலுக்கு கிடைத்த பெரிய சாதனை. தங்கவயலில் தொழிற்சாலைகள் ஏற்படுத்த ஐ.டி., பி.டி., நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், பல வெளிநாட்டு நிறுவனங்கள் அரசிடம் பதிவு செய்துள்ளன. இப்பணிகள் விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.தங்கவயல் நகராட்சி முன்னாள் தலைவர் வி.முனிசாமி கூறுகையில், இதுநாள் வரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் வருவதற்கான அரசாணை வந்திருப்பது. தங்கவயலுக்கு தீபாவளி தினமாக கொண்டாட வேண்டிய நாளாகும் என்றார். புல்லன்ஸ் வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயபால் உட்பட பலர் உடனிருந்தனர்.