‘ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெற உத்தரவாதம் தேவையில்லை’
‘ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெற உத்தரவாதம் தேவையில்லை’
UPDATED : ஜூலை 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிகழ்ச்சியில், கல்விக்கடன் குறித்து ஏராளமான மாணவர்கள், பெற்றோரின் சந்தேகங்களுக்கு வங்கி உயர் அதிகாரி விளக்கம் அளித்தார்.
வங்கிகளில் ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க தேவையில்லை என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது.
எனவே, ரூ.4 லட்சம் வரை வங்கிக்கடன் கோரும் மாணவர்கள் ஜாமீன் அளிக்க வேண்டியதில்லை. ரூ.4 லட்சத்திற்கு மேல் கடன் பெறும் மாணவர்கள் ஜாமீன் தர வேண்டும்.
ரூ.7.5 லட்சத்திற்கு மேல் ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன் பெறும் மாணவர்கள் சொத்து ஆவணங்கள், சேமிப்புப் பத்திரங்களை உத்தரவாதமாக அளிக்க வேண்டும் என்று கல்விமலர் தொலைபேசி ஆலோசனை நிகழ்ச்சியில் வங்கி உயர் அதிகாரி பதில் அளித்தார்.
மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளும், வங்கி உயர் அதிகாரி அளித்த பதில்களும்:
- 82 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள எனக்கு ஆகஸ்ட் 2ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சிலிங். எனக்கு கல்விக்கடன் கிடைக்குமா?
- கண்ணன், விழுப்புரம்
முதலில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில், அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் சேர்ந்த பிறகே, வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். கல்லூரியில் அட்மிஷன் பெற்ற பிறகே கல்விக்கடன் வாங்க வங்கிகளை அணுக வேண்டும். உங்களது இருப்பிடத்திற்கு அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையை அணுகி கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
- கல்லூரி விடுதி கட்டணத்தையும், கல்விக்கடனில் பெறமுடியுமா?
- சவுந்தரராஜன், திருவண்ணாமலை
கல்லூரியில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த சான்றிதழை கல்லூரியில் இருந்து பெற்று வங்கியில் அளிக்க வேண்டும். அந்தந்த ஆண்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கல்லூரிக்கு வங்கி வழங்கும். கல்லூரியில் வசூலிக்கப்படும் விடுதி கட்டணம், கம்ப்யூட்டர், புத்தகம் வாங்குவதற்கான கட்டணம் உள்பட படிப்பிற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் வங்கிக்கடனாக பெறலாம்.
- எனக்கு கோவையில் உள்ள கல்லூரியில் இ.சி.இ., பாடப்பிரிவில் இடம் கிடைத்துள்ளது. கல்விக்கடன் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?
- கோகிலா, கோவை
கல்லூரிக்கட்டண மதிப்பீடு விவரச் சான்று, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி அட்மிஷன் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை கல்விக்கடன் பெற வங்கியில் அளிக்க வேண்டியதிருக்கும். ரூ.4 லட்சத்திற்குமேல் கடன்தொகை தேவைப்பட்டால் செக்யூரிட்டி தரவேண்டியதிருக்கும். ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் பெற எந்தவித உத்தரவாதமும் தேவையில்லை.
- பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ள எனக்கு கல்விக்கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை வங்கி அளித்துள்ளது. எவ்வளவு தொகை கடன் கிடைக்கும்?
- நாகராஜன், நீலகிரி
உங்கள் படிப்பிற்கு தேவையான முழுதொகையையும் கடனாக பெறலாம். அதற்கான விவரங்களை கல்லூரியில் வாங்கி கொடுக்க வேண்டும். ரூ.4 லட்சத்திற்கு மேல் இருந்தால் கடன்தொகையில் 5 சதவீதத்தை (மார்ஜின் மணி) நீங்கள் செலுத்த வேண்டும்.
- பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு கல்விக்கடன் கிடைக்குமா? வட்டி விகிதம் எவ்வளவு?
- கற்பகம், பழனி
கிடைக்கும். அது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும். கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.
- நான் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறேன். கல்விக்கடன் பெற விரும்புகிறேன். கல்லூரியில் ஓராண்டுக்கான கல்விக்கட்டணம் எவ்வளவு என்ற விவரம் மட்டுமே அளித்துள்ளனர். மூன்று ஆண்டுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த மதிப்பீட்டை தர மறுக்கிறார்கள். எனவே, கல்விக்கடன் பெற முடியவில்லை. இதற்கு என்ன செய்வது?
- ராஜாராம், கடலூர்.
வங்கிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டு படிப்பிற்கும் தனித்தனியே கல்விக்கடன் வழங்குவது கிடையாது. கல்லூரி நிர்வாகத்தை அணுகி விவரங்களை தெரிவித்து மூன்றாண்டுகளுக்கான கட்டண மதிப்பீட்டை பெற முயற்சி செய்யவும்.
- பி.இ., ஏரோநாட்டிக்கல் படிப்பிற்கு கல்விக்கடன் கிடைக்குமா?
- கார்த்திக், மதுரை
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வேண்டும் என்பது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதி. எனவே, அங்கீகரிக்கப்பட்ட எந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் கல்விக்கடன் பெற தகுதி உண்டு.
- எனது தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வருமானம் குறைவு தான். இதனால், கல்விக்கடன் கிடைக்குமா?
- சுபாசினி, திருப்பூர்
பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற உன்னத நோக்கில் தான் கல்விக்கடன் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. எனவே, வங்கிகள் கல்விக்கடன் தர மறுக்க முடியாது. பெற்றோரின் வருமானத்தை பொறுத்து கல்விக்கடன் வழங்கப்படுவது இல்லை; உங்களை நம்பித்தான் கடன் வழங்கப்படுகிறது. எனினும், வங்கிக்கடன் பெறுவதற்கு உங்களது தந்தை பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஊதிய சான்றிதழ் வாங்கி வங்கியில் சமர்பிக்கலாம். அல்லது ‘நோட்டரி பப்ளிக்’கிடம் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கலாம். கல்விக்கடன் பெறுவதற்கு முன்பே, நீங்கள் செலுத்திய முதலாமாண்டு கட்டணத்தையும் உரிய ரசீது அளித்து வங்கியில் திரும்ப பெற்றக்கொள்ளலாம்.
- திருநெல்வேலி அண்ணா பல்கலையில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.டெக்., படிப்பில் சேர்ந்துள்ளேன். பல்கலை அருகில் உள்ள வங்கியில் கல்விக்கடன் பெற முடியுமா?
- கோமதி சித்ரா, உடுமலை
உங்களது பெற்றோர் வசிக்கும் பகுதியில் உள்ள வங்கியில் மட்டுமே கல்விக்கடன் பெறுவது சாத்தியம். படித்து முடித்து வேலையில் சேர்ந்த ஆறு மாதத்தில் கடனை செலுத்த தொடங்கிவிட வேண்டும். வேலை கிடைக்காத பட்சத்தில் ஓர் ஆண்டு வரை காலக்கெடு அளிக்கப்படும். அதன்பிறகு, உங்களது பெற்றோரிடம் இருந்து தான் கடன் தொகை வசூலிக்கப்படும். கல்விக்கடனை 5 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.
- கல்விக்கடன் பெற குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?
- செல்வி, திண்டுக்கல்
கல்விக்கடன் பெறுவதற்கு குறிப்பிட்ட அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வங்கி அதிகாரிகளை அணுகுவதற்கு பொதுவாக காலை நேரத்தை தேர்ந்தெடுக்காதீர்கள். அந்தநேரம் வழக்கமான வங்கி பணிகளில் அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, பிற்பகல் 3 மணிக்கு மேல் சென்று வங்கி அதிகாரிகளை அணுகுங்கள். அப்போது, உங்களது கோரிக்கையை பொறுமையாக அவர்களிடம் விளக்கலாம்.
- எனது மகனுக்கு இந்தாண்டு புதியதாக துவங்கிய கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்விக்கடன் கிடைக்குமா?
- விஜயகுமார், கோவை
கல்விக்கடன் பெறுவதற்கு புதிய கல்லூரியா, பழைய கல்லூரியா என்பது முக்கியமல்ல. அந்த கல்லூரியும், நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள படிப்பும் அங்கீகாரம் பெற்றிருப்பதே முக்கியம்.