முதல்கட்ட இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு 33,602 இடங்கள் ஒதுக்கீடு!
முதல்கட்ட இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு 33,602 இடங்கள் ஒதுக்கீடு!
UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
எட்டாயிரத்து 291 பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. இ.சி.இ., பிரிவை எட்டாயிரத்து 869 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை ஆறாயிரத்து 443 பேரும் தேர்வு செய்துள்ளனர்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் பொதுப்பிரிவில் 65 ஆயிரத்து 763 ஆண்கள், 49 ஆயிரத்து 725 பெண்கள் உட்பட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 488 பேர் விண்ணப்பித்திருந்தனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் கடந்த 11ம் தேதி துவங்கியது.
இதில் 170.5 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். முதற்கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.
சென்னை மற்றும் திருச்சி அண்ணா பல்கலைக் கழகங்கள் மூலம் புதிதாக துவக்கப்பட்டுள்ள ஆறு புதிய பல்கலைக் கழககல்லூரிகள் உட்பட இந்த ஆண்டு 72 புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த கல்லூரிகள் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தம் 20 நாட்கள் நடைபெற்ற முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு 41 ஆயிரத்து 893 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். எட்டாயிரத்து 291 பேர் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளவில்லை. 151 பேர் கவுன்சிலிங்கிற்கு வந்திருந்தும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்யவில்லை.
இதன்படி, முதற்கட்ட கவுன்சிலிங்கில் 33 ஆயிரத்து 602 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே எம்.பி.பி.எஸ்., படிப்பை தேர்வு செய்திருந்த 69 மாணவர்கள் அப்படிப்பை கைவிட்டு, இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர்.
முதற்கட்ட கவுன்சிலிங்கில், எட்டாயிரத்து 869 பேர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இ.சி.இ.,) பிரிவையும், ஆறாயிரத்து 443 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், நான்காயிரத்து 257 பேர் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.,) பிரிவையும், நான்காயிரத்து 79 பேர் மெக்கானிக்கல் பிரிவையும், மூன்றாயிரத்து 783 பேர் எலக்டிரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன் (இ.இ.இ.,) பிரிவையும், ஆயிரத்து 843 பேர் சிவில் பிரிவையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் இதர பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர்.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம்கட்ட கவுன்சிலிங்கிற்கு 140.5 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 21 ஆயிரத்து 676 ஆண்கள், 18 ஆயிரத்து 89 பெண்கள் உட்பட மொத்தம் 39 ஆயிரத்து 765 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் 71.25 வரை ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 33 ஆயிரத்து 851 மாணவர்கள் அழைக்கப்படவுள்ளனர்.