இல்லை நிதி ஒதுக்கீடு: விளையாட்டு போட்டிகள் நடப்பது கேள்விக்குறி
இல்லை நிதி ஒதுக்கீடு: விளையாட்டு போட்டிகள் நடப்பது கேள்விக்குறி
UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கடலூர்: கல்வித்துறையில் விளையாட்டுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் குடியரசு தின விழா விளையாட்டுப்போட்டிகள் உட்பட அனைத்து போட்டிகளும் நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக அரசு கல்வித் துறையில் மாணவ, மாணவிகளுக்கு பல சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இலவச பாட புத்தகங்கள், இலவச சைக்கிள், சீருடை மற்றும் இந்த ஆண்டு முதல் பள்ளி சிறப்பு கட்டணத்தையும் ரத்து செய்து சலுகையும் அறிவித்துள்ளது. கட்டணம் ஏதுமின்றி இலவசமாக படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. சிறப்பு கட்டணத்தில் மாணவ, மாணவிகளிடம் விளையாட்டு நிதி ரூ.10 வசூலிக்கப்பட்டது.
இந்த விளையாட்டு நிதியில் வருடாந்திர விளையாட்டு போட்டிகள் மற்றும் குடியரசு தின விழா போட்டிகள் நடத்தப்படும். குடியரசு தின விழாவையொட்டி வட்டம், மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில விளையாட்டு போட்டிகள் நான்கு கட்டங்களாக நடக்கும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு குடியரசு தின விழாவின் போது பரிசுகள் வழங்கப்படும்.
இந்த நான்கு கட்ட போட்டிகளில் முதல் கட்டமாக வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் துவங்கி விடும். டிசம்பர் மாதத்திற்குள் மாநில போட்டிகள் முடிந்து விடும். வட்ட அளவிலான போட்டிகளுக்கு ஜூன் இறுதி அல்லது ஜூலை மாதம் முதல் வாரத்தில் தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்துவது, விளையாட்டிற்கு மாணவர்களை தேர்வு செய்வது என பணிகள் துவங்கும்.
ஆனால் எந்த மாவட்டத்திலும் வட்ட அளவிலான போட்டிகள் துவங்கும் அறிகுறியே இல்லை. இதனால் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சாதிக்கத் துடிக்கும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடக்குமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த ரூ.2 கோடிக்கும் மேல் செலவாகும். சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்ததால் பள்ளிகளில் குடியரசு தின விழா உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடத்த நிதி இல்லாததால் முன் பணமாக தருவதாக கடந்த ஜூன் மாதம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அரசு எப்போது நிதி ஒதுக்கீடு செய்கிறதோ அப்போது தான் விளையாட்டுப் போட்டிகள் துவங்கும் நிலை உள்ளது.