மாணவர் தற்கொலை முயற்சி: பள்ளி தாளாளருக்கு முன்ஜாமீன்
மாணவர் தற்கொலை முயற்சி: பள்ளி தாளாளருக்கு முன்ஜாமீன்
UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகாவில் அப்பல்லோ ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உள்ளது. இதன் தாளாளராக ஜபதோனி டேவிட் என்பவர் உள்ளார்.
இந்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்காததால், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக டேவிட் மீது குமாரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி டேவிட் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ரகுபதி விசாரித்தார். டேவிட் சார்பில் வக்கீல் கே.செல்வராஜ் ஆஜராகி, ‘தேர்வு எழுத மாணவரை அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டும், கல்வி அதிகாரி தான் அனுமதிக்கவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க டேவிட் தயாராக உள்ளார்’ என வாதாடினார்.
இதையடுத்து, டேவிட்டுக்கு முன்ஜாமீன் வழங்கி, நீதிபதி ரகுபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக யாரையும் மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அச்சுறுத்தக் கூடாது என்றும், குமாரலிங்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக இரண்டு வாரங்கள் ஆஜராக வேண்டும் என்றும், அதன் பிறகு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.