UPDATED : ஜூலை 31, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நவீன தொழில்நுட்பத்தை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக, விசேஷமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும், இந்த லேப்-டாப்பை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில், பெங்களூருவைச் சேர்ந்த இந்திய அறிவியல் நிறுவனமும், சென்னையைச் சேர்ந்த ஐ.ஐ.டி.,யும் ஈடுபட்டுள்ளன.
இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் புரந்தரேஸ்வரி டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், கல்வி தொடர்பான தேசிய இயக்கம் ஒன்றை விரைவில் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இன்டர்நெட் இணைப்புகளை ஏற்படுத்தவும் தீர்மானித்துள்ளது.
இந்த ஆண்டு, ஒரு லட்சம் அரசு உதவி பெறும் பள்ளிகளும், 18 ஆயிரம் கல்லூரிகளும், அகண்ட அலைவரிசை சேவைகளை இலவசமாக பெறலாம். வரக்கூடிய ஆண்டுகளில் மேலும் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
வரும் நாட்களில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், நாட்டின் கல்வி முறையில் முக்கிய பங்கு வகிக்கும். அதனால், பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இந்தத் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் புரந்தரேஸ்வரி கூறினார்.