கழிப்பிடம் கழுவுமாறு ஆசிரியர்கள் மிரட்டியதாக மாணவர்கள் புகார்
கழிப்பிடம் கழுவுமாறு ஆசிரியர்கள் மிரட்டியதாக மாணவர்கள் புகார்
UPDATED : ஆக 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவையை அடுத்துள்ள விளாங்குறிச்சியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 25க்கும் மேற்பட்டோர், பெற்றோர் சகிதமாக கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு ஜூலை 31ம் தேதி வந்தனர். அங்கு கலெக்டர் இல்லாததால் கலெக்டர் இல்லத்துக்குச் சென்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
விளாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகளை, கழிப்பிடத்தை கழுவச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். இதற்கு மறுத்த குழந்தைகளை ஜாதிப் பெயரைச் சொல்லி ஆசிரியர்கள் அடித்துள்ளனர்.
தலைமையாசிரியரிடம் கேட்டபோது, அவரும் தகாத வார்த்தைகளில் பதில் அளிக்கிறார். இதுபற்றி ஊரிலிருந்து வந்து சிலர் கேட்டதால், கோபமடைந்து சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால், ‘டி.சி.,’யைக் கிழித்து விடுவோம் என்றும் ஆசிரியர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால், அந்த பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகுபாடு காட்டும் ஆசிரியர்களை அங்கிருந்த உடனடியாக மாற்ற வேண்டும்.
இதுபற்றி விசாரித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி, விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.