ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தனி பல்கலைக்கழகம்: பொன்முடி
ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க தனி பல்கலைக்கழகம்: பொன்முடி
UPDATED : ஆக 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டம் கல்வியில் என்னால் தான் பின் தங்கி விட்டது என கூறுகின்றனர். மாவட்டத்தில் 12 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியுள்ளோம். 22 நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், 56 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும் உயர்த்தியதோடு 9 துவக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் மாவட்டத்திற்கு இரண்டு அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், ஒரு அரசு மருத்துவ கல்லூரியும் கொண்டு வந்துள்ளோம். இரண்டு ஆண்டுகளில் மாவட்டத்தில் கல்வித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. 2005-06ம் ஆண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு 50 சதவீதமாக இருந்தது. அப்போது 43 ஆயிரத்து 299 பேருக்கு கவுன்சிலிங் மூலம் இடம் ஒதுக்கப்பட்டது.
2006-07 தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகளை நாங்கள் அழைத்து பேசி அரசு இட ஒதுக்கீட்டிற்கு 65 சதவீதமாக பெற்றோம். அந்த கல்வி ஆண்டில் 58 ஆயிரத்து 692 பேர் கவுன்சிலிங் மூலம் இடம் பெற்றனர். மேலும் கடந்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வையும் ரத்து செய்தோம். இந்த ஆண்டு 80 ஆயிரத்து 877 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது.
இவர்களுக்கான கட்டணம் ரூ.32 ஆயிரம் மட்டுமே. தனியார் கல்லூரிகளில் நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த 36 தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் ஆண்டுக்கு 6 முதல் 7 லட்சம் பேர் பொறியியல் பட்டம் முடிக்கிறார்கள். அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளை தமிழகம் உருவாக்கி வருகிறது.
தமிழக வரலாற்றில் ஒரே ஆண்டில் 6 அரசு பொறியியல் கல்லூரிகளை தொடங்கிய பெருமை தமிழக முதல்வரையே சாரும். இது தவிர 7 கலைக் கல்லூரிகளும், 3 மத்திய பல்கலைக் கழகத்தையும் அரசு கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் பல்கலைக் கழகமும் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.