பள்ளிகள் தரம் உயர்த்துவதில் பாரபட்சம்; கல்வித்துறை மீது குற்றச்சாட்டு
பள்ளிகள் தரம் உயர்த்துவதில் பாரபட்சம்; கல்வித்துறை மீது குற்றச்சாட்டு
UPDATED : ஆக 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஒன்றியத்தில் பள்ளிகளை தரம் உயர்த்துவதில் கல்வித் துறை பாரபட்சமாக நடந்து கொண்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம் கல்வியில் பின் தங்கிய பகுதியாக உள்ளது.
ஆவிபுதூர், எடையூர், கரடி, கோமாளுர், பனப்பாடி, பாடியந்தல், கனகனந்தல், பிள்ளையார்பாளையம், திருக்கோவிலூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சாங்கியம் ஆரம்பப் பள்ளி விடுபட்டதால் கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தினர்.
பள்ளிகளின் தரம் உயர்வு பட்டியல் வெளியிட்டதில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்த சாங்கியம் பள்ளியை தவிர திருக்கோவிலூர் ஒன்றியத்தில் எந்த பள்ளிகளும் தரம் உயர்த்தவில்லை.
திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 10 பள்ளிகள் தரம் உயர்த்த பரிந்துரை கடிதம் அனுப்பியதில் ஒரு பள்ளிக்கு அனுமதி கிடைத்திருப்பது கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முகையூர் ஒன்றியத்தில் ஏழு பள்ளிகளும், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் நான்கு பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. திருக்கோவிலூர் ஒன்றியத்தில் ஒரு பள்ளி மட்டும் போராட்டம் நடத்தியதால் தரம் உயர்த்தினர்.
கல்வியில் பின் தங்கிய பகுதியாக உள்ள திருக்கோவிலூரை கல்வித்துறை தொடர்ந்து புறக்கணிப்பதையே காட்டுகிறது என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.