UPDATED : ஆக 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியரிடையே மதிப்புசார் கல்வியை நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலையின் கீழ் செயல்படும் 145 கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரண்டாவது பருவத்தேர்வில் (செமஸ்டர்) மதிப்புசார் கல்வியுடன், மனித உரிமைகள் பற்றிய தகவல்களையும் சேர்த்து ‘மதிப்புசார் கல்வி மற்றும் மனித உரிமைகள்’ என்ற பெயரிலான பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலை முடிவு செய்துள்ளது. இந்த பாடத்தை தயாரிக்க ஒரு கல்விக்குழுவை அமைத்துள்ளது.
இதில் கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஷீலா ராமச்சந்திரன், காரமடை ஸ்ரீ குமரன் கல்லூரி முதல்வர் தங்கராஜ், அரசு சட்டக்கல்லூரி விரிவுரையாளர் தாமரைச்செல்வி, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரி இயற்பியல் துறை தலைவர் பெருமாள், முனைவர் சுதாகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக்குழு அக்., இறுதிக்குள் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கும். பின், டிச., மாதத்தில் இரண்டாவது பருவத்தேர்வில் அனைத்து கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த பாடம் நடத்தப்படும். இதனுடன் சேர்த்து மாணவ, மாணவியருக்கு யோகாசன பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

