20 ஆயிரம் இன்ஜினியரிங் சீட் காலியாக இருக்கும்: மன்னர் ஜவகர்
20 ஆயிரம் இன்ஜினியரிங் சீட் காலியாக இருக்கும்: மன்னர் ஜவகர்
UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, ஏ.சி.டெக் பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.ஏ.பி., பொறியியல் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகளில் புதிதாகச் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 8ம் தேதி துவங்கின.
கிண்டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது:
சிறந்த ஆயிரத்து 500 மாணவர்களுக்குத் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கிறது. இங்கு நீங்கள் படிக்கும் நான்கு ஆண்டுகள், உங்களது வாழ்க்கையின் அடுத்த 40 ஆண்டுகளைத் தீர்மானிக்கும். உங்களது முன்னேற்றத்திற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதி, சிறந்த ஆசிரியர்கள் ஆகிய இரண்டுமே இங்கு உள்ளது.
தமிழக பொறியியல் கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளும் சேர்த்து, நான்கு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இவற்றில் 30 ஆயிரம் ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில், 22 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். இ.சி.இ., ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.இ.இ., ஆகிய ‘சர்க்யூட்’ பிரிவுகளில் தான் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களில் 95 சதவீதம் பேருக்கு, மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாப்ட், டி.இ.ஷா ஆகிய இரண்டு நிறுவனங்கள், மாதம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தலா ஆறு மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்கின்றன.
நீங்கள் எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தாலும், அது தான் சிறந்தது என நினைத்துப் படிக்க வேண்டும். தனியார் பொறியியல் கல்லூரிகளில் இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., ஆகிய படிப்புகளில் சேர்ந்து 70 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண்களைப் பெறுபவர்களில் 90-95 சதவீதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார்.
நிகழ்ச்சியில் “இந்த ஆண்டும் தமிழக பொறியியல் கல்லூரிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும்,” என்று பேசியது குறித்து அவரிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் 10 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு தமிழகத்தில் 75க்கும் மேற்பட்ட புதிய பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 20 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.
இந்த ஆண்டு அதிக மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பதால், கடந்த ஆண்டை விட 10 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் கூடுதலாகச் சேரலாம். ஆனாலும், இந்த ஆண்டு தமிழக பொறியியல் கல்லூரிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

