‘பல்கலையாக தரம் உயர்ந்தாலும் அரசு கட்டணமே வசூலிக்கப்படும்’
‘பல்கலையாக தரம் உயர்ந்தாலும் அரசு கட்டணமே வசூலிக்கப்படும்’
UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள், பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டபின், அரசு உதவி பெறும் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்கும்; வரும் 2009ம் ஆண்டு பல்கலை செயல்பாட்டிற்கு இளநிலை பாடப்பிரிவுகள் எதுவும் ரத்து செய்யப்படாது,” என, கோவை பி.எஸ்.ஜி., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி சுவாமிநாதன் அளித்த பேட்டி:
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பார்மசி, பிசியோதெரபி, நர்சிங் ஆகிய கல்லூரிகள் ஒன்றிணைக்கப்ப்டடு, தனி பல்கலையாக அமைக்கப்படவுள்ளது.
இந்த பல்கலை செயல்படத்துவங்கிய பின், தொழில்நுட்பம், மருத்துவம், கலை அறிவியல் பிரிவுகளில் புதிய படிப்புக்களை அதிகளவில் துவக்க முடியும்.
கலை அறிவியல் கல்லூரிகளில் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் குறைந்த அளவே மாணவர் சேர்க்கை உள்ளது. இதை மாற்றியமைக்க புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வருவது அவசியம்.
வேளாண்மை, மருத்துவம், இன்ஜி., உட்பட பல்வேறு பிரிவுகளில் நானோ டெக்னாலஜி பயன்படுகிறது. பி.எஸ்.ஜி., பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டபின், இந்த தொழில்நுட்பத்தை பல பிரிவுகளில் பாடங்களாக வழங்க முடியும்.
கோவை அண்ணா பல்கலை, கோவை பாரதியார் பல்கலை, சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்றுள்ளது.
கோவை பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள். வெளிநாடுகளில் கல்லூரிகள் அனைத்தும் பல்கலையாகவே கருதப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பல்கலை அங்கீகாரம் என்ற முறை பின்பற்றப்படுவதில்லை.
இன்றைய சூழலில் புதிய படிப்புகளை அதிகளவில் துவக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்நேரத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகங்கள், வேலைவாய்ப்புக்கு ஏற்ப புதிய புதிய படிப்புக்களை அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் உள்ள 360 இன்ஜி., கல்லூரிகளில் 160க்கும் அதிகமான கல்லூரிகள் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள், பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டால் இன்றைய தேவைக்கு ஏற்ப புதிய படிப்புக்களை வடிவமைத்து மாணவர்களுக்கு வழங்க முடியும்.
திறமை வாய்ந்த ஆசிரியர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுக்கலாம். ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்கு நடக்கும் கருத்தரங்குகளில் பங்கேற்க செய்வதோடு, ஆசிரியர் பரிமாற்றம், மாணவர் பரிமாற்றம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும்.
பி.எஸ்.ஜி., பல்கலையாக மாறும் போது கல்வி கட்டணம் உயர்த்தப்படும்; சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் படிக்க முடியாது என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
கடந்த 1920ம் ஆண்டு பி.எஸ்.ஜி., அறக்கட்டளை சர்வஜன என்ற பெயரில் துவக்கப்பட்டது. சர்வஜன என்றாலே அனைத்து மக்களுக்காகவும் என்றுதானே பொருள்.
பி.எஸ்.ஜி., பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டாலும், அரசு உதவி பெறும் படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கூடுதலாக ஒரு பைசா கூட வசூலிக்கப்படமாட்டாது. மாணவர்கள் அனைவரும் கவுன்சிலிங் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
பல்கலையாக மாறிய பின், இளநிலை பட்டப்படிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற தவறான தகவலும் பரப்பப்பட்டு வருகிறது. எங்களுக்கு மாணவர் எண்ணிக்கை அதிகளவில் தேவை. அதனால், இளநிலை பட்டப்படிப்புக்களை ஒரு போதும் ரத்து செய்யப்போவதில்லை.
பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டபின், சுயநிதி பாடப்பிரிவுகளில் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கப்படுவர். சுயநிதி பாடப்பிரிவுகளுக்கும் யு.ஜி.சி., நிர்ணயித்த கட்டணத்தை மாணவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.
கடந்த 1974ம் ஆண்டு தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்கள், தேசிய அளவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் முதலிடத்தில் உள்ளது. தற்போது பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களில் 16 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பல்கலையாக தரம் உயர்த்தியபின், இந்த எண்ணிக்கையை 40 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.
இளநிலை பட்டப்படிப்பை மாணவர்கள், ஆராய்ச்சியில் கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த ஆண்டு நானோ டெக்னாலஜி, ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறைக்காக ரூ.8 கோடி முதலீடு செய்யவுள்ளோம்.
அறிவியல் ஆராய்ச்சி இருந்தால் தான் புதிய கண்டுபிடிப்புக்கள் பிறக்கும். எல்லாரும் ஐ.டி., என்று சென்றுவிட்டால், ஆராய்ச்சியை செய்வது யார்? இதைக் கருத்தில் கொண்டு பி.எஸ்.ஜி., பல்கலை அடிப்படை அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ச்சியை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் எம்.இ., சிவில் படிப்பவர்கள், பி.எச்.டி.,யும் சிவில் பிரிவில்தான் மேற்கொள்ள முடியும். ஆனால், அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் ஒருவர், விரும்பிய பிரிவில் பி.எச்.டி., ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள முடியும். இதே நிலை பி.எஸ்.ஜி., பல்கலையிலும் கொண்டுவரப்படும்.
பி.எஸ்.ஜி., 60 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கல்வி நிறுவனம். இக்கல்வி நிறுவனத்தை பல்கலையாக தரம் உயர்த்துவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படப்போவது இல்லை. பல்கலையாக மாறுவதால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத சில ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை பி.எஸ்.ஜி., நிர்வாகம் பழிவாங்கும்; கூடுதலாக வேலை வாங்கும் என்று பயப்படுகின்றனர்.
தற்போது போராட்டத்தில் வெறும் 70 ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இவர்கள், தங்களது பிரச்னைகளை பி.எஸ்.ஜி., நிர்வாகத்துடன் பேசி தீர்வு காணமுடியும். மொத்தத்தில் பி.எஸ்.ஜி., நிர்வாகம், அரசு உதவி பெறும் படிப்புக்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தமிழக மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இவ்வாறு சுவாமிநாதன் கூறினார்.

