பி.எஸ்.ஜி., பல்கலையானாலும் அரசு ஒதுக்கீடு முறை உண்டு
பி.எஸ்.ஜி., பல்கலையானாலும் அரசு ஒதுக்கீடு முறை உண்டு
UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: “பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, பல்கலையாக மாற்றினாலும் அங்குள்ள அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாடப்பிரிவுகளில் அரசு ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும்,” என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மேலும் அவர், கூறியதாவது:
உலக அளவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே உறுப்பு பல்கலைகள் உள்ளன. மற்ற நாடுகளில் ஒருமை (யுனிட்டரி) பல்கலைகள் உள்ளன.
இதுபோன்ற பல்கலைகள், ஆராய்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும். தமிழகத்தில் ஒருமை பல்கலை துவக்கப்பட்டால், பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) நிதி அதிகம் கிடைக்கும்.
கோவை அரசு கலைக் கல்லூரியை, அரசு ஒருமை பல்கலையாக மாற்ற ஆசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த பல்கலையில், சீனியர் ஆசிரியர் துணைவேந்தராக நியமிக்கப்படுவார்.
துறைத் தலைவர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இருப்பர். அரசு கலைக்கல்லூரிகளில் இருக்கும் அனைத்து சலுகைகளும், பல்கலையாக மாறிய பின்பும் வழங்கப்படும்.
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனம், ஒருமை பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டாலும், அரசு உதவி பெறும் படிப்புகளில் 90 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கவுன்சிலிங் முறையில் நிரப்பப்படும்.
அதுபோல் சுயநிதி பாடப்பிரிவுகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்களை அரசே நிரப்பும். பல சுயநிதி இன்ஜி., கல்லூரிகள், அரசுக்கு 65 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்பதால், நிகர்நிலை பல்கலையாக மாற்ற முயற்சித்து வருகின்றன. இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

