மகத்துவம் பெறும் மனித வளத்துறை: நிறுவனங்களின் வெற்றிக்கு வித்து!
மகத்துவம் பெறும் மனித வளத்துறை: நிறுவனங்களின் வெற்றிக்கு வித்து!
UPDATED : ஆக 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
முன்பெல்லாம் மனித வளத்துறை என்பது ஊதிய வரிசை மற்றும் பணியாட்களின் பயன்களை பிரித்துக் கொடுக்கும் துறை என்ற குறுகிய வரையறைக்கு உட்பட்டு இருந்தது.
போட்டிகள் அதிகரித்து நிறுவனங்களின் ஒவ்வொரு முடிவும் வெற்றியை தீர்மானிக்கும் விதமாக மாறிய பின், மனித வளத்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. மனித வளத்தை முறையாக கையாளுவதன் மூலமாக ஊழியர்களின் திறனை கணிசமாக அதிகரிக்க முடிவதோடு நிறுவனத்தையே வெற்றிகரமாக செயல்பட வைக்க முடியும் என்று அனுபவ பூர்வமாக உணரப்பட்டது.
தற்போது மனித வளத்துறை நிர்வாகத்தில் ஊழியர்களின் தேவையை உணர்ந்து நிறைவேற்றுவது, ஊழியர்-நிர்வாக உறவு மேம்பாடு, திறன் மேம்படுத்துதல் போன்ற கூடுதல் பணிகள் சேர்ந்துள்ளன.
இதனால் நிறுவனங்களில் இதற்கான பிரத்யேகமான துறை உருவானதுடன் ஊழியர்கள், தாங்களும் வளர்ச்சி பெற்று, நிறுவனத்தையும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழிமுறைகள் ஆராயப்படுகின்றன.
வேலை எப்படி?
பணியாளர் நிர்வாகம் என்பது பொதுவாக தொழில் உறவுகள் மற்றும் மனித வள மேம்பாடு/நிர்வாகம் என்னும் இரு பிரிவுகளாக இருக்கிறது. உற்பத்தி நிறுவனங்களில் தொழிலாளர் சட்டம், தொழிற்சங்கம் போன்ற அம்சங்களை கவனித்துக் கொள்ளும் விதத்தில் ஐ.ஆர். பிரிவும் சேவை நிறுவனங்களில் எச்.ஆர்.எம். துறையும் இருக்கின்றன.
இத்துறையே ஊழியர் நியமனம் மற்றும் பெர்பார்மன்ஸ் அப்ரைசல் (செயல் மதிப்பீடு) போன்ற பணிகளைச் செய்கிறது. இன்றையப் பணிச் சூழலில் எச்.ஆர். துறையின் பங்கு மிக மிக முக்கியமாகியுள்ளது.
போட்டிச் சூழலுக்கேற்ப ஊழியர்களுக்கு தொடர் பயிற்சிகளை அளிப்பது, ஊழியர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பணியிடத்தில் வசதிகளைக் கொடுப்பது, சமூகப் பணிகளைச் செய்வது போன்ற பணிகளை எச்.ஆர். மேலாளர்கள் செய்கிறார்கள். இந்த செயல்களின் அடிநாதமாக நிறுவன மேம்பாடும் தனி மனித உற்பத்தி விகிதத்தை அதிகரிப்பதுமே இருக்கிறது. வேலைக்கேற்ற ஊதியங்களை தருவதும் இப் பிரிவின் வேலையாகவே இருக்கிறது.
பெரிய நிறுவனங்களில் முழு அளவிலான எச்.ஆர்.பிரிவு செயல்படுகிறது. இதற்கு ஒரு இயக்குனரும் இருக்கிறார். இவருக்கு உதவி புரியும் வகையில் பல்வேறு மேலாளர்கள் பணியின் தன்மைக்கேற்ப சிறிய குழுவாக இருக்கிறார்கள். இவர்கள் பணி நியமனம், பயிற்சி போன்ற சிறு சிறு பிரிவுகளில் மேலாளராகப் பணி புரிகிறார்கள்.
தொழில் முறை மற்றும் தொழிலரங்க உளவியலாளர்களும் இந்த குழுக்களின் ஒரு அங்கமாக பணி புரிகிறார்கள். சிறிய நிறுவனங்களில் ஒரே அதிகாரியே இந்தப் பணிகளை கூடுதலாக செய்கிறார்கள். இவர்களுக்கு உதவ இவர்களுக்குக் கீழ் நிர்வாக அதிகாரிகள் இருக்கிறார்கள்.
யாருக்குப் பொருத்தமானது இத்துறை?
அதிக அழுத்தமான சூழ்நிலையிலும் நிதானமாக இருந்து சரியான முடிவுகளை எடுப்பது இத்துறைக்கு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. மனித வளத்தை வெற்றிக்கான உத்தியாக பயன்படுத்தவதே சரியான தீர்வாக இருப்பதால் இது குறித்த தீர்க்கமான பார்வையும் தெளிவும் நம்பிக்கையும் கொண்டவர்களே இப் பணிக்குப் பொருத்தமாக இருப்பர்.
இதே போல தனி மனிதர் அல்லது குழுவின் தொழில் குறித்த மதிப்பை முன்னேற்றம் பெறச் செய்வதும் இப் பணியில் அவசியம். மனிதர்களுடனும் மனித உறவுகளுடனும் நெருங்கிய தொடர்புடைய துறை என்பதால் இத் துறையில் பணி புரிய சரளமான மனித உறவு ஏற்படுத்திக் கொள்ளும் தன்மையும், திறனும் இதற்கு மிக அவசியம்.
தகவல் தொடர்புத் திறன், பொறுமை, புரிந்து கொள்ளும் தன்மை போன்ற தன்மைகளும் தேவைப்படுகின்றன. இத்துறையில் வெற்றிகரமாக பணியாற்ற மனித வள நிர்வாகத்தின் நுணுக்கங்களை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
நிர்வாகம் தொடர்பான புள்ளி விபரங்களை கையாளுவது, ஊழியர் விடுப்பு, ஊதிய விகிதம் போன்ற கணிதத் திறமைகளும் தேவை. பிரச்னைகளை தீர்க்கும் திறன், ஊழியர் தேவைகளை திட்டமிடுவது போன்ற கூடுதல் திறன்களும் அவசியம். தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள்இத் துறையில் மிளிருகிறார்கள்.
தேவைப்படும் தகுதிகள்:
புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக எச்.ஆர். பிரிவில் பட்ட மேற்படிப்பு இதற்குத் தேவைப்படுகிறது. வெலிங்கர், ஜே.பி.ஐ.எம்.எஸ்., என்.எம்.ஐ.எம்.எஸ். போன்ற நிறுவனங்கள் இத்துறையில் புகழ் பெற்ற நிறுவனங்களாகும்.
இத்துறையில் நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப அவ்வப்போது செமினார்களில் கலந்து கொள்வது, சான்றிதழ் தகுதிகளை கூடுதலாகப் பெறுவது போன்றவை மூலமாக மட்டுமே காலத்துக்கேற்ற மாற்றங்களை அறிய முடியும்.
படித்து முடித்தபின்பு ஏதாவது ஒரு எச்.ஆர். நிறுவனத்தில் 2 முதல் 3 ஆண்ட பணி அனுபவம் பெறுவதும் முக்கியத் தேவையாக மாறி வருகிறது. பணி புரியும் காலத்திலேயே பகுதி நேர எம்.பி.ஏ. படித்து தகுதி பெறுவதும் வலியுறுத்தப்படுகிறது.
எதிர்காலம் எப்படி?
எச்.ஆர். படித்தவருக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. கால் சென்டர், பி.பி.ஓ., ஐ.டி. போன்ற தறைகளில் வளர்ச்சி காரணமாக இத்துறையில் அபரிமிதமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. முதல் நிலைப் பணியாளராக இத்துறையில் நுழைந்தாலும் கூட, அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க மேம்பட்ட பயிற்சியாளராக உயருவது வரை எண்ணற்ற வாய்ப்புகளை இத்துறை கொண்டுள்ளது.

