UPDATED : மே 25, 2024 12:00 AM
ADDED : மே 25, 2024 05:26 PM

ஜெனிவா:
ஐ.நா.,வின் பேரிடர் அபாய குறைப்பு அமைப்பின் (யுஎன்டிஆர்ஆர்) ஐ.நா., பொதுச்செயலாளர் ஆண்டனி குட்டரெசின் சிறப்பு தூதராக இந்திய அதிகாரி கமல் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்று கொண்டு, தனது பணியை துவக்கினார்.
கடந்த 20ம் தேதி அவர், யுஎன்டிஆர்ஆர் தலைவராக பணியை துவக்கினார். இதற்கு முன்னர், ஜப்பானின் மமி மிஜூடோரி தலைவராக இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கமல் கிஷோர் நியமிக்கப்பட்டார். பேரிடர் அபாய குறைப்பு துறையில், தேசிய அளவில் சர்வதேச அளவிலும், ஐ.நா., சிவில் அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.
2015 முதல், இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ( என்டிஎம்ஏ) பணியாற்றிய இவர், இந்தியா ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்ற நேரத்தில், பேரிடர் அபாய குறைப்பு குழுவிற்கு தலைமை தாங்கினார்.
என்டிஎம்ஏவில் இணைவதற்கு முன்னர், ஐ.நா.,வின் வளர்ச்சி திட்டத்திலும் ஜெனிவா, டில்லி, நியூயார்க்கில் பணியாற்றி உள்ளார். பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். இந்தியாவில் 1992 -94ம் ஆண்டுகளில் பூகம்பத்திற்கு பிந்தைய திட்டங்கள் குறித்த பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.