sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி; டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வுகள் ரத்து

/

தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி; டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வுகள் ரத்து

தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி; டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வுகள் ரத்து

தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி; டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வுகள் ரத்து


UPDATED : பிப் 09, 2026 10:47 PM

ADDED : பிப் 09, 2026 10:51 PM

Google News

UPDATED : பிப் 09, 2026 10:47 PM ADDED : பிப் 09, 2026 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடி காரணமாக, குரூப் - 2, 2ஏ தேர்வுகள், தமிழகம் முழுதும் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகின்றன.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை - 2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர், உதவியாளர் என, பல்வேறு 'குரூப் - 2, 2ஏ' பணிகளில், 828 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி வெளியிடப்பட்டது.

9,457 பேர் தகுதி

அதற்கான முதல்நிலை தேர்வு, கடந்த ஆண்டு செப்., 28ம் தேதி நடந்தது. தேர்வுக்கு, 5 லட்சத்து 53,634 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 4 லட்சத்து 20,217 பேர் முதல்நிலை தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள், கடந்த டிச., 22ல் வெளியாகின. அதில், 'குரூப் - 2' முதன்மை தேர்வுக்கு, 1,126 பேர்; குரூப் - 2ஏ தேர்வுக்கு, 9,457 பேர் தகுதி பெற்றனர்.

இந்நிலையில், குரூப் - 2, 2ஏ முதன்மை தேர்வுகள், தமிழகம் முழுதும், 38 மையங்களில் நேற்று நடப்பதாக இருந்தன. காலையில், 'குரூப் 2ஏ' பொது அறிவு தேர்வும்; மதியத்தில், 'குரூப் 2, 2ஏ' தமிழ் தகுதி தேர்வும் நடப்பதாக இருந்தன.
சென்னையில் மாநில கல்லுாரி, நந்தனம் அரசு கல்லுாரி, அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி ஆகிய 3 மையங்களில் தேர்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காலை 09:30 மணிக்கு தேர்வுகள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. இதற்காக தேர்வர்கள், காலை 08:30 மணிக்கே தேர்வு மையங்களுக்கு வரத் துவங்கினர்.
குவிந்தனர்

இதில், அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரி மையத்தில், அனுமதி வழங்கப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும், ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, பலரின் பெயர் மற்றும் தேர்வு எண்கள், தேர்வு மைய அறிவிப்பு பலகையில் இல்லை. சந்தேகம் அடைந்த அதிகாரிகள், தேர்வர்களின் ஹால் டிக்கெட்டை பரிசோதித்த போது, தேர்வு மைய முகவரி தவறுதலாக இருப்பது தெரிய வந்தது.

அதாவது, நந்தனம் கல்லுாரி தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட, 500க்கும் அதிகமான தேர்வர்களின் ஹால் டிக்கெட்களில், டி.ஜி.வைஷ்ணவ கல்லுாரி என, தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள், தேர்வு மைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதே போல, டி.ஜி.வைஷ்ணவ கல்லுாரி தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில், நந்தனம் அரசு கல்லுாரி என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த குளறுபடிகள் காரணமாக கொந்தளித்த தேர்வர்கள், வைஷ்ணவ கல்லுாரி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வந்து, அவர்களுடன் பேச்சு நடத்தினார்.

'தேர்வர்களுக்கு கணினி வழியாகவே ஹால் டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தேர்வு மையங்கள் மாறி மாறி குறிப்பிடப்பட்டு உள்ளன. நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வர்கள் அனைவரும் பதற்றமான மனநிலையில் உள்ளீர்கள். அதனால், தமிழகம் முழுதும் தேர்வு ரத்து செய்யப்படுகிறது,' என்றார்.

இதற்கிடையில், கோவை உள்பட பிற மாவட்டங்களில் தேர்வுகள் துவங்கப்பட்டு, வினாத்தாள்கள் வினியோகிக்கப்பட்டன. பின்னர், தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில், குரூப் - 2, 2ஏ தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 2 கட்டங்களாக இந்த தேர்வு நடப்பதால், ஆண்டுக்கணக்கில் சவால்களை கடந்து, இதற்காக தயாராகி வருகிறோம். இதுபோன்ற குளறுபடிகள், எங்கள் நம்பிக்கையை, உறுதியை சீர்குலைத்து விடுகின்றன. - தேர்வர்கள்

பொது அறிவு தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் நேற்று நடக்கவிருந்த குரூப் - 2, 2ஏ முதன்மை தேர்வுகளை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக மூன்று மையங்களில் நடத்த இயலவில்லை. எனவே, தேர்வர்கள் நலனை முன்னிட்டு, காலை, மாலை என இரு வேளைகளில் நடக்க இருந்த இரண்டு தேர்வுகளும், தமிழகம் முழுதும் ரத்து செய்யப்படுகின்றன. வேறு தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வர்கள் அனைவருக்கும், மறுதேர்வு நடக்கும் தேதிக்கு, 15 நாட்களுக்கு முன், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஹால் டிக்கெட் விபரம், குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் வழியாக தெரிவிக்கப்படும். அதே நேரம், வரும் 22ம் தேதி அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குரூப் - 2 பணிகளுக்கான பொது அறிவு தேர்வு, அன்றைய தினமே நடத்தப்படும். தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகள் கவனத்துடன் சரிபார்க்கப்பட்டு, வரும் 13ம் தேதி வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

'தேர்வை கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத அரசு'
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

தி.மு.க., ஆட்சியில், நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை, இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. குரூப் 2 போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது, தமிழகத்தின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும் பல இடங்களில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதே தெரியாமலேயே, தேர்வர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

'டெக்னிக்கல் பால்ட்' என, ஒற்றை வரியில் தப்பிக்க, தி.மு.க., ஆட்சியாளர்கள் முற்படுகின்றனர். உங்களின் தவறால், இளைஞர்களின் பல ஆண்டு கால உழைப்பும், நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். தமிழகத்தை சூப்பர் ஸ்டார் மாநிலமாக மாற்றி விட்டதாக, வாய்கிழிய மேடையில் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், ஒரு தேர்வை கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத அரசு.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, டி.என்.பி.எஸ்.சி., மீது மாணவர்களுக்கு நம்பிக்கை பொய்த்து விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

பா.ம.க., தலைவர் அன்புமணி:
தேர்வுக்கான அடிப்படையான ஏற்பாடுகளை கூட செய்யாமல், டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் கோட்டை விட்டதே இதற்கு காரணம். ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்த முடியாத நிலையில் தான், தி.மு.க., அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தி, டி.என்.பி.எஸ்.சி., உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

த.வெ.க., தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா:
விளம்பர மாடல் தி.மு.க., அரசு, ஒரு தேர்வைக் கூட நடத்த திறனற்று இருக்கிறது. ஊழல் செய்வதற்காகவே தேர்வில் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால், நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்தில், 888 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அமலாக்கத் துறை குற்றம் சாட்டுகிறது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் குளறுபடியை சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்:
தேர்வை கூட முறையாக நடத்த முடியாமல், லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு தி.மு.க., அரசு விளையாடுவது கண்டனத்திற்குரியது. இதில், அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ தேர்வு குளறுபடிகளை அடுத்து, அனைத்து தரப்பிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரத்தை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நேற்றிரவு உத்தரவிட்டது. புதிய அலுவலராக வெங்கட பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.







      Dinamalar
      Follow us