முன்மாதிரி பசுமை இல்லம்: தலைமை ஆசிரியை குடும்பத்தினருக்கு குவியும் பாராட்டு
முன்மாதிரி பசுமை இல்லம்: தலைமை ஆசிரியை குடும்பத்தினருக்கு குவியும் பாராட்டு
UPDATED : டிச 24, 2025 07:51 AM
ADDED : டிச 24, 2025 07:52 AM
பெரியகுளம்:
பெரியகுளம் என்.ஜி.ஓ., காலனி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை தனபாக்கியம். இவரது மகன் ஐ.டி., பணியாளர் சிவக்குமார். இவர்கள் இணைந்து இல்லத்தை பசுமையாக மாற்றி, வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளனர்.
இவர்களது முயற்சியை பாராட்டிய பெரியகுளம் நகராட்சி நிர்வாகம், 'முன் மாதிரி பசுமை இல்லமாக முதல் ஐந்து இடங்களில் ஒரு இல்லமாக தேர்வு செய்துள்ளது. இதனால் தாய், மகன் கூட்டணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த முன்மாதிரி பசுமை இல்லத்தில் 'மணி பிளாண்ட்' செடிகள், தக்காளி, பப்பாளி, கொய்யா, வாழைப்பழம் உட்பட பழ வகைகள் அதிகளவில் பருவகாலங்களில் முளைப்பது வழக்கம். இவற்கை அறிய வகை குருவிகள், ஏழு வகையான பறவைகள் ருசித்துச் செல்கின்றன.
இவைகளுடன் வீட்டில் சமைத்த உணவும் வழங்குவதால், தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு பறவைகள் கும்பலாக வந்து செல்வது வழக்கமாக நடக்கிறது. இதற்காகவே வெளியூருக்கு சென்றாலும், பறவைகளுக்கு உணவு அளிப்பதற்கு ஆட்களை நியமித்து உள்ளனர்.
வீட்டுத்தோட்டம் கறிவேப்பிலை, குழந்தைகளுக்கு சீரடிக்காமல் தடுக்கும் சீர் பச்சிலை, விஷ முறிவு மூலிகையான நாகதாளி, சிறியா நங்கை, சங்குப்பூக்கள், தக்காளி, பச்சை மிளகாய், பாகற்காய், எலுமிச்சை, வாழை, தென்னை, கீரை வகைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான செடிகள், பூக்கள், மரங்கள் என வீட்டுத் தோட்டத்தை அலங்கரிக்கின்றன.
உள்ளத்திற்கு பயிற்சி தனபாக்கியம், தலைமை ஆசிரியை (ஓய்வு):
பூர்வீகம் விவசாயக் குடும்பம் என்பதால் பள்ளி சென்ற வயதிலேயே செடிகள் மீது ஈர்ப்பு வந்தது. பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்த போது, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலராக பள்ளி வளாகத்தில் நுாற்றுக் கணக்கான மரக்கன்றுகளை கூட்டு முயற்சியால் நடவு செய்து, பராமரித்து வளர்த்தோம். தொடர்ந்து வத்தலக்குண்டு அருகே விருவீடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பள்ளி வளாகத்தில் 200 மரக்கன்றுகள், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இதனை தொடர்ந்து 8 சென்ட் வீட்டில் 3 சென்ட் ஒதுக்கி வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளேன்., என்றார். தோட்டத்தில் தினமும் ஒன்றரை மணி நேரம் தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது என குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வதால், உடல், உள்ளம் புத்துணர்வு ஏற்படுகிறது. இந்த புத்துணர்வை வீடுகளில் தோட்டம் வளர்த்தால் உணரலாம்., என்றார்.
இயற்கை உரம் சிவக்குமார் (ஐ.டி., பணியாளர்):
வாழையடி வாழையாக எனது தாயார் வீட்டுத் தோட்டத்தை நேசிப்பதை தொடர்ந்து, நானும், எனது மனைவி, பிள்ளைகள் என அனைவரும் செடி, கொடி, மரங்களை நேசித்து வருகிறோம். சென்னையில் படிக்கும் எனது இரு பிள்ளைகள் ஓவியப் போட்டியில் எங்கள் வீட்டுத் தோட்டத்தை மனதில் நினைத்து, படம் வரைந்து பரிசுகளை வென்று உள்ளனர். எந்த உரமும் வெளியில் வாங்குவது இல்லை. விழுகின்ற இலைகளை, காய்கறி கழிவுகள், சாணத்தை பயன்படுத்தி மக்கச்செய்து இயற்கை உரமாக பயன்படுத்துகிறோம். மார்கழி மாதம் துவக்கத்தில் புதிதாக ஐந்து செடிகளை நட்டுள்ளோம்., என்றார்.

