சென்னை ஐஐடியில் புதிய பிஜி டிப்ளமா படிப்பு அறிமுகம்
சென்னை ஐஐடியில் புதிய பிஜி டிப்ளமா படிப்பு அறிமுகம்
UPDATED : ஏப் 16, 2025 12:00 AM
ADDED : ஏப் 16, 2025 05:13 PM

சென்னை:
சென்னை ஐஐடியில் புதிய பட்டமேற்படிப்பு டிப்ளமா பாடநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, புதிய பட்டதாரிகள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும். தொழில்துறையில் தேவையான திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக இது அமைகிறது.
இந்த பாடநெறி, மாணவர்கள் வேலைக்கு செல்லும் போதும் படிக்க வாய்ப்பளிக்கிறது. வகுப்புகள் மாலை நேரம் அல்லது வார இறுதி நாட்களில் ஆன்லைனில் நேரடி வகுப்புகளாகவும், பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களாகவும் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 2025 ஆகும். நுழைவுத் தேர்வு ஜூலை 13, 2025 அன்று நடைபெறுகிறது. வகுப்புகள் ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் தொடங்கும்.
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள், சென்னை ஐஐடி வழங்கும் வெப்-எனேபிள்டு எம்.டெக் பட்டத்திற்கு மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் பெற்றிருக்கின்றனர்.
ஐஐடி மெட்ராஸ், அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் இணைத் தலைவர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறுகையில், இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் தொழில்முறை நிபுணர்களுக்கான திட்டமாக உள்ளது. இந்தப் புதிய பாடநெறி, தங்கள் தொழில் வாழ்க்கையை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடர்ந்து செல்லும் வாய்ப்பை வழங்குகிறது, என்றார்.
பாடநெறியின் சிறப்பம்சங்கள்:
*நேரடி ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பதிவுகள்
*வேலை செய்யும் போது கற்றுக்கொள்ளும் வசதி
*கைம்முறையிலான திட்டங்கள், இடைக்கால மதிப்பீடுகள்
*இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள்
*ஆய்வக பயிற்சிக்காக சென்னை ஐஐடிக்கு வருகை தரும் வாய்ப்பு
*எம்.டெக் பட்டத்திற்குத் தொடர்ந்து மேம்படும் வாய்ப்பு
வல்லுநர்கள் அளிக்கும் நிபுணத்துவங்கள்: விமானவியல், செயற்கை நுண்ணறிவு, மின்தொழில்நுட்பம், இயந்திரவியல், இன்ஜினியரிங் டிசைன் (E-Mobility), மற்றும் Process Safety.
மேலும் விவரங்களுக்கு: https://code.iitm.ac.in/webmtech