விடைத்தாள் எரிந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை!
விடைத்தாள் எரிந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை!
UPDATED : ஏப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் தீயில் எரிந்து போன சம்பவத்தில், விடைத்தாளுக்குரிய மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தேவையில்லை. அவர்களுக்கு உரிய பரிகாரம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார். இதையடுத்து, மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்பது உறுதியாகி உள்ளது.
வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 10ம் வகுப்பு விடைத்தாள்கள் எரிந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 24ம் தேதி இரவு 10.30 மணிக்கு, வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் விடைத்தாள்கள் திருத்தும் முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. தேர்வுத்துறை இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்து குறித்து நேரில் பார்வையிட்டு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
அன்று மாலை நிலவரப்படி விடைத்தாள் சேமிக்கும் அறையில் தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் 22 ஆயிரத்து 327, ஆங்கிலம் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் 12 ஆயிரத்து 888, கணித விடைத்தாள்கள் மூன்றாயிரத்து 825, அறிவியல் விடைத்தாள்கள் மூன்றாயிரத்து 146, சமூக அறிவியல் விடைத்தாள்கள் ஒன்பதாயிரத்து 316, உருது இரண்டாம் தாள் விடைத்தாள்கள் 360, கணிதம் உருது மொழி விடைத்தாள்கள் 16, அறிவியல் உருது மொழி விடைத்தாள்கள் 132, சமூக அறிவியல் உருது மொழி விடைத்தாள்கள் 10 என மொத்தம் 52 ஆயிரத்து 20 விடைத்தாள்கள் பாடவாரியாக சேமிக்கப்பட்டிருந்தன. இந்த விடைத்தாள்களில் ஆங்கிலம் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் இருந்த பகுதி மட்டும் தீயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு தேர்வுத்துறை வழக்கமாக கடைப்பிடித்து வரும் நடைமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பரிகாரம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட விடைத்தாளுக்குரிய
மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என்றார் தங்கம் தென்னரசு.