வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்காதவர்களுக்கு சிறப்பு சலுகை
வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்காதவர்களுக்கு சிறப்பு சலுகை
UPDATED : ஏப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: கடந்த 2001ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிலும் சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால், 40 ஆயிரம் பதிவுதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொடர்பான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பரசன் வெளியிட்டார். அதன் விவரம்:
2001-2006ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பக பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள், தங்களது பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளவும், முந்தைய பதிவு மூப்பினை திரும்ப பெறவும், தாமதத்தைப் பொறுத்து சிறப்புப் புதுப்பித்தல் சலுகையினை அரசு வழங்கி உத்தரவிட்டது. இதுவரை மூன்று லட்சத்துக்கு 80 ஆயிரத்து 138 பதிவுதாரர்கள் பயன்பெற்றனர். தற்போது 2007ம் ஆண்டிற்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். இதனால் 40 ஆயிரம் பதிவுதாரர்கள் பயன்பெறுவர்.
பட்ட மேற்படிப்பு, தொழில்சார் கல்வி மற்றும் நிர்வாகத் தகுதிக்கான பட்டம் பெற்றவர்கள், தங்களது தகுதியினை பதிவு செய்ய மாநில அளவில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. தென் மாவட்ட மனுதாரர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மதுரையில் கிளை அலுவலகம் துவங்கப்படும்.
மேல்நிலைக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கான முக்கிய தகவல்கள் ஆகியன குறித்து தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, ஆன்-லைன் மற்றும் வீடியோ கான்பரசிங் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.