56 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 20 சதவீதம் தான் தேர்ச்சி
56 இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 20 சதவீதம் தான் தேர்ச்சி
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 12:40 PM

சென்னை:
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 56 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
அண்ணா பல்கலையின் இணைப்பில், 400க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 310 கல்லுாரிகள் தன்னாட்சி அந்தஸ்து இன்றி, அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை வழியே செமஸ்டர் தேர்வுகளை நடத்துகின்றன. இந்த கல்லுாரிகளில், கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களின் செமஸ்டர் தேர்வுகளின் இறுதியில், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதத்தை, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இரு கல்லுாரிகளில், 90 சதவீதத்துக்கும் மேலான மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆறு கல்லுாரிகளில், 80 முதல், 90 சதவீதம் வரையிலும்; 46 கல்லுாரிகளில், 60 முதல் 80 சதவீதம் வரையிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், 101 கல்லுாரிகளில், 40 சதவீதம் முதல், 60 சதவீதம் வரையிலும்; 97 கல்லுாரிகளில், 20 முதல், 40 சதவீதம் வரையிலும் தேர்ச்சி கிடைத்துள்ளன. 32 கல்லுாரிகளில், 10 முதல், 20 சதவீதம் வரையிலும்; 24 கல்லுாரிகளில், 1 முதல், 10 சதவீதம் வரையிலும் தேர்ச்சி கிடைத்துள்ளன. இரு கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ள நிலையில், கல்லுாரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, மற்ற மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லுாரி தேர்ச்சி விபரங்களை, www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.