வாய் புற்றுநோய் அறிவோம், வெல்வோம்: புத்தகம் வெளியீடு
வாய் புற்றுநோய் அறிவோம், வெல்வோம்: புத்தகம் வெளியீடு
UPDATED : ஆக 27, 2024 12:00 AM
ADDED : ஆக 27, 2024 09:37 AM
சென்னை:
வாய் புற்றுநோய் ஆண்களைப் போல், பெண்களையும் பாதிக்கும், என பெண்நலம் மருத்துவமனையின் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் பா.சந்தோஷ் ராஜன் பேசினார்.
சென்னை பெண் நலம் மருத்துவமனையின், 15ம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முகத் தாடை அறுவை சிகிச்சை நிபுணரும், மருத்துவமனை மேலாளருமான சந்தோஷ் ராஜன் எழுதிய, வாய் புற்றுநோய் அறிவோம்; வெல்வோம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, சந்தோஷ் ராஜன் கூறியதாவது:
பெண்நலம் அமைப்பின் வாயிலாக, அனைவரும் சந்திப்பதில் மகிழ்ச்சி. புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு, விழிப்புணர்வு மிக முக்கியம். வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நான் எழுதிய புத்தகத்தை, பெண்நலம் மருத்துவமனையின், 15வது ஆண்டு விழாவில் வெளியிடுவது மகிழ்ச்சி.
கொரோனா எவ்வாறு பரவுகிறது என விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதுபோல், வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த ஆறு ஆண்டுகளில், புகையிலை பயன்பாட்டால் பலர், வாய் புற்றுநோயுடன் போராடுவதை பார்த்திருக்கிறேன். நோயாளிகள் பலர் கேட்கும் கேள்வி, வாய் புற்றுநோய் எவ்வாறு ஏற்படுகிறது என்பது தான்.
அதற்காக, இப்புத்தகம் எழுதப்பட்டது.
வாய் புற்றுநோய் அறிகுறிகள், கண்டறிதல், எவ்வாறு சிகிச்சை பெறுவது போன்ற விபரங்கள், புத்தகத்தில் உள்ளன. பல நோயாளிகள், தாமதமாக டாக்டர்களை அணுகுகின்றனர். வாய் புற்றுநோய் ஆண்களை மட்டும் பாதிக்கும் என்பது தவறான புரிதல்; பெண்களையும் பாதிக்கும்.

