8997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப உத்தரவு
8997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப உத்தரவு
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 09:49 AM

சென்னை:
சத்துணவு திட்டத்தில், 8997 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை, தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ், மதியம் கலவை சாதத்துடன், மசாலா முட்டை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்களில், ஒரு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என, மூன்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. சத்துணவு பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்த, தற்போது காலியாக உள்ள பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 9997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும், மாதம் 3000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 26.99 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீமுரளீதரன் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படும் பணியாளர்களில், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.