விண்வெளி ஆராய்ச்சியில் நம் நாட்டை அமெரிக்கா பின்தொடரலாம்...! மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளி ஆராய்ச்சியில் நம் நாட்டை அமெரிக்கா பின்தொடரலாம்...! மயில்சாமி அண்ணாதுரை
UPDATED : ஜன 29, 2025 12:00 AM
ADDED : ஜன 29, 2025 10:25 AM

திருப்பூர்:
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 35ம் ஆண்டு விழாவையொட்டி, பவள விழா கொண்டாட்டம் நடந்தது.
பள்ளி சேர்மன் ஆண்டவர் ராமசாமி, தலைமை வகித்தார். பொருளாளர் ராதா ராமசாமி குத்துவிளக்கேற்றினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சந்திரயான் - 1 மற்றும் 2ன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், சந்திரயான் வாயிலாக நிலவின் தென் துருவத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் அடுத்த தலைமுறைக்கு, பூமிக்கு மாசு ஏற்படுத்தாத ஹீலியம் 3 எரிபொருளை நிலவில் இருந்து பெற முடியும்.
வரும் காலத்தில், ஹீலியம் 3 எரிபொருள் தரும் வளைகுடா நாடாக நிலவு மாறும். மீண்டும் மனிதன் நிலவில் கால் பதிப்பான். நிலவு ஆராய்ச்சியில் நாம் அமெரிக்காவை பின் தொடர்ந்திருக்கலாம். இனி, அமெரிக்கா நம்மை பின்தொடரும் என்றார்.
முன்னதாக, பள்ளியில் பயின்று மருத்துவம், பொறியியல், ஆடிட்டர் என பல்வேறு துறைகளில் இணைந்துள்ள மாணவ, மாணவியருக்கும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை அவர் வழங்கினார்.
கே.எம்.சி.எச்., மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ராஜேந்திரன் பேசுகையில், தோல்விகளை கண்டு துவளாமல், தன்னம்பிக்கையுடன் குறிக்கோளை நோக்கி பயணித்தால், வெற்றி பெற முடியும் என்றார். சிறந்த சமூக சேவையை பாராட்டி, பள்ளி சேர்மன் ஆண்டவர் ராமசாமிக்கு, நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன், டீமேக் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் நந்தகோபால், பள்ளி செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், இணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் முன்னாள் தலைவர் சண்முகராஜ், முதன்மை கட்டட கலைஞர் அருண்பிரசாத், 'நிட்மா' செயலாளர் ராஜாமணி, பள்ளி முதல்வர் அனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.