நீலகிரி பழங்குடியின ஓவியருக்கு பத்ம ஸ்ரீ; மறைந்தாலும் உயிர்ப்போடு படைப்புகள்
நீலகிரி பழங்குடியின ஓவியருக்கு பத்ம ஸ்ரீ; மறைந்தாலும் உயிர்ப்போடு படைப்புகள்
UPDATED : ஜன 26, 2026 12:11 PM
ADDED : ஜன 26, 2026 12:14 PM

பந்தலுார்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த குரும்பா ஓவியர் கிருஷ்ணனுக்கு, 'பத்ம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே வெள்ளரிகோம்பை கிராமத்தை சேர்ந்தவர், ஆலுகுரும்பா பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ஓவியர் கிருஷ்ணன். குரும்பர் ஓவியங்களை வரைவதில் சிறப்பு பெற்றவர். கடந்த 30 ஆண்டுகளாக, சமூக வாழ்க்கை, சடங்குகள், திருமணம், வனத்தின் வாழ்வியல் போன்றவற்றை வரைய, இயற்கை நிறங்களையும், ஆலம் வேர் துாரிகைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான 'எழுத்துப் பாறை' ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு, ஓவியம் வரைந்துள்ள இவர், 17 முறை டில்லி சென்று பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளார். கடந்தாண்டு மார்ச் 14ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது மனைவி சுசிலா, மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். மூத்த மகள் வாசுகி, தந்தை இறந்தவுடன் கல்லுாரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். மகன் ராகுல், 9ம் வகுப்பு, மகள்கள் கீதா, 7ம் வகுப்பு, கீர்த்திகா 4ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
“எனது கணவர் குரும்பா ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அவர் உயிரோடு இருந்தவரை, என்னை வேலைக்கு அனுப்பியதில்லை. ஓவியங்களை வரைந்ததற்காக, பல்வேறு தரப்பினரும் பாராட்டி பரிசுகள் வழங்கியுள்ளனர்.
அவர் இறப்பதற்கு முன், இன்னும் சில மாதங்களில் எனக்கு பெரிய விருது ஒன்று கிடைக்கும்; அதை குடும்பத்தோடு சென்று வாங்கி வர வேண்டும் என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆனால், உடல் நலக்குறைவால் கடந்தாண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். தற்போது விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எனது குழந்தைகள் படிப்பதற்கு, உதவி செய்தால் மேலும் மகிழ்ச்சியாக இருக்கும்.”
இவ்வாறு, அவர் கூறினார்.

