தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சதவீத இட ஒதுக்கீடு: அன்பழகன் கோரிக்கை
தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சதவீத இட ஒதுக்கீடு: அன்பழகன் கோரிக்கை
UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 09:36 AM
புதுச்சேரி:
தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டினை பெற சட்டசபை கூட்ட தொடரில் சட்டம் கொண்டு வர வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 50 சதவீதம், 325 இடங்கள் அரசின் இட ஒதுக்கீடாக பெற வேண்டும். கடந்த கால ஆட்சிகளில் 325 இடங்களுக்கு பதிலாக 239 இடங்கள் என 32 சதவீதம் இடங்களை மட்டுமே பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணைப்படி மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும் 50 சதவீதம் இடங்களை பெற சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அந்த அரசாணையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பிளஸ்2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த இட ஒதுக்கீட்டில் பயன்பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் போன்று 9,10,11,12 என நான்காண்டு படித்தால் மருத்துவக் கல்வியில் இடம் அளிக்கும் வாய்ப்பினை புதுச்சேரியில் முதல்வர் ஏற்படுத்தி தர வேண்டும். இவற்றை வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் ஓரிரு தினங்களுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.