UPDATED : ஆக 08, 2024 12:00 AM
ADDED : ஆக 08, 2024 09:37 AM
கோவை:
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசால் நடத்தப்படும் இலவச சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், விண்ணப்பங்களை இம்மாதம், 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுதுபவர்களுக்கு, சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தி, தொடர் பயிற்சி வழங்கப்படுகிறது. கோவையில், பாரதியார் பல்கலையில் இம்மையம் அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு மாதந்தோறும், 7,500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. பத்து மாதங்கள் ஊக்கத்தொகையுடன், இலவச பயிற்சியை பெறலாம்.
இதற்கான மதிப்பீட்டு தேர்வு வரும், செப்., 15ம் தேதி நடக்கவுள்ளது.இத்தேர்வு வாயிலாக, பாரதியார் பல்கலை மையத்திற்கு, 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பட்டப்படிப்பு முடித்த யார் வேண்டுமானலும் இத்தேர்வை எழுதலாம். விதிமுறைகள் குறித்து, அறிய, நான் முதல்வன் இணையதளத்தை பார்க்கலாம்.