மாணவர்கள் இல்லாத தொடக்க பள்ளிகள் மூடல்! தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாற்றம்
மாணவர்கள் இல்லாத தொடக்க பள்ளிகள் மூடல்! தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாற்றம்
UPDATED : ஜூலை 04, 2026 11:45 AM
ADDED : ஜூலை 04, 2026 11:48 AM
சிவகங்கை:
மாவட்டத்தில் இக்கல்வி ஆண்டில் ஒரு மாணவர்கள் கூட வருகை இல்லாத 21 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளை மூடியதோடு, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தொடக்க கல்வித் துறையின் கீழ் சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை என 800 க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் நாளுக்கு நாள் மாண வர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
சிறிய கிராமங்களை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள பெரும்பாலான ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை இன்றி, பள்ளிகள் காலியாக உள்ளது.
ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி இம்மாவட்டத்தில் 21 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் ஒரு மாணவர் சேர்க்கை கூட இல்லாததால், இந்த கல்வி ஆண்டு முதல் இப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
சிவகங்கை கல்வி மாவட்டத்தை விட, தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் தான் அதிகளவில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இப்பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாற்று பள்ளி களுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
9க்கும் குறைவாக 167 பள்ளிகள் சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் உள்ள 800க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் 9 மற்றும் அதற்கு குறைவான மாணவர் வருகை உள்ளதாக 167 பள்ளிகள் கண்டறியப் பட்டுள்ளன. கல்வித்துறை சார்பில் கிராமப்புற பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை.
பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிப்பதில்லை போன்ற காரணத்தால் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். கல்வித்துறை இனியாவது விழித்துக்கொண்டு கிராமங்கள் தோறும் சென்று அரசு பள்ளிக்கு பெற்றோர் ஏன் தங்களது குழந்தைகளை அனுப்புவதில்லை என்பதை ஆராய்ந்து, அவர்களை அரசு பள்ளிகளில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
