டிஜிட்டல் உலகுக்கு பொது விதி பிரதமர் மோடி வலியுறுத்தல்
டிஜிட்டல் உலகுக்கு பொது விதி பிரதமர் மோடி வலியுறுத்தல்
UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 11:08 AM
புதுடில்லி:
விமான போக்குவரத்து துறைக்கு உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகிற்கும் சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
சர்வதேச தொலை தொடர்பு ஒன்றியம், டபுள்யு.டி.எஸ்.ஏ., எனப்படும், உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை - 2024-ஐ, டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியா மொபைல் காங்கிரஸ் - 2024 ன், எட்டாவது பதிப்பையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
செமி கண்டக்டர் உற்பத்தி
இதில், மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள், 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000 தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டில், 120 கோடி மொபைல் போன் பயனர்கள் உள்ளனர். 95 கோடி இணைய பயனர்கள் உள்ளனர். உலகில், 40 சதவீதத்துக்கும் அதிகமான நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடக்கின்றன.
கடந்த 2014ல், இந்தியாவில் இரண்டு மொபைல் போன் உற்பத்தி நிலையங்கள் மட்டுமே இருந்தன. இன்று, 200க்கும் மேற்பட்டவை உள்ளன. முன்பு பெரும்பாலான மொபைல் போன்களை இறக்குமதி செய்தோம். இன்று நாங்கள் மொபைல் போன் ஏற்றுமதியாளராக அறியப்படுகிறோம்.
முன்பு செய்யப்பட்ட தயாரிப்பை விட, இந்தியா தற்போது 6 மடங்கு அதிகமாக மொபைல் போன்களை தயாரிக்கிறது. முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போன்களை உலகிற்கு வழங்கி வருகிறோம். இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்திக்கு பெரும் முதலீடு செய்து வருகிறோம்.
வெறும் 10 ஆண்டுகளில், இந்தியா அமைத்துள்ள, ஆப்டிகல் பைபர் கம்பி வடங்களின் நீளம் பூமிக்கும், சந்திரனுக்கும் இடையிலான துாரத்தை விட 8 மடங்கு அதிகம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த மொபைல் காங்கிரஸில், 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினோம். இன்று, நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கிட்டத்தட்ட 5ஜி சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி வேகமாக செயல்பட்டு வருகிறோம்.
உலகளாவிய நிர்வாகத்திற்கான முக்கியத்துவத்தை சர்வதேச நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று கிடைக்கும் அனைத்து டிஜிட்டல் கருவிகள் மற்றும் பயன்பாடுகள் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை.
சர்வதேச விதிகள்
எனவே எந்த நாடும், அதன் குடிமக்களை இணைய அச்சுறுத்தல்களிலிருந்து தனியாக பாதுகாக்க முடியாது. உலகளாவிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
விமானப் போக்குவரத்துத் துறைக்கு உலகளாவிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கியது போல், டிஜிட்டல் உலகத்திற்கும் பொதுவான சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு ஆகியவை, ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.