இந்தியா - கனடா இடையேயான வர்த்தகத்தில் பாதிப்பு இல்லை
இந்தியா - கனடா இடையேயான வர்த்தகத்தில் பாதிப்பு இல்லை
UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 11:06 AM
புதுடில்லி:
இந்தியா - கனடா இடையேயான வர்த்தக உறவில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று, வர்த்தக தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜி.டி.ஆர்.ஐ., மேலும் தெரிவித்துள்ளதாவது:
முந்தைய நிதியாண்டான 2022 - 23ல் 68,890 கோடி ரூபாயில் இருந்து, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் 69,720 கோடி ரூபாயாக வர்த்தகம் மிதமான வளர்ச்சி கண்டுள்ளது.கனடாவில் இருந்து இறக்குமதி 38,180 கோடி ரூபாயாக அதிகரித்திருந்த நிலையில், ஏற்றுமதி ஓரளவு சரிந்து 31,540 கோடி ரூபாயாக இருந்தது. அரசியல் காரணங்களினால், தற்போதைய பொருளாதார உறவுகளில் எவ்வித பாதிப்பும் அடையாமல் நிலையானதாக உள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
பொதுவாக, இருநாட்டு அரசியல் உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டாலும், பொருளாதார உறவுகள் இடையே ஒருபோதும் பின்னடைவை ஏற்படுத்தாது. இருப்பினும், இருநாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்க, தங்கள் நடவடிக்கைகளை கவனமாக கையாள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டத்தில், கனடாவில் இருந்து 32,200 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது.