தனியார் கல்லுாரி ஆக்கிரமித்த ஒரு ஏக்கர் அரசு நிலம் மீட்பு
தனியார் கல்லுாரி ஆக்கிரமித்த ஒரு ஏக்கர் அரசு நிலம் மீட்பு
UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 05:53 PM
சென்னை:
ஆலந்துார், சென்னை, பரங்கிமலை ஜி.எஸ்.டி., சாலையில், ரெமோ இன்டர்னேஷனல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரி நிர்வாகத்தினர், அரசு நிலம் மூன்று ஏக்கரை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.
கடந்த ஜூலை மாதம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, பல்லாவரம் தாசில்தார் தலைமையில், ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மூன்று ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக, கல்லுாரி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, கல்லுாரி மட்டும் நடத்திக்கொள்ள, தற்காலிக உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அரசு கைப்பற்றிய இடத்தில், ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, வாகனங்களை நிறுத்துமிடமாக கல்லுாரி நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இது தொடர்பாக, வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவின்படி, பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் வாயிலாக தனியார் கல்லுாரி நிர்வாகம் ஆக்கிரமித்த இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் என தாசில்தார் தெரிவித்தார்.