UPDATED : ஜன 08, 2026 03:56 PM
ADDED : ஜன 08, 2026 03:58 PM

சென்னை:
எழும்பூரில் உள்ள கன்னிமாரா நுாலகம், 129 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் அரசால் கட்டப்பட்டது. அதன் அருகில் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த கட்டடம் தற்போது, 4.58 கோடி ரூபாயில் பள்ளிக்கல்வித் துறையால் சீரமைக்கப்பட்டு உள்ளது.
தரைதளத்தில் வாசகர்களின் உடைமைகள் பாதுகாப்பு அறையை செப்பனிட்டு, குழந்தைகள் பகுதியாகவும்; குறிப்புதவி நுால்கள் இருந்த பகுதி, சொந்த நுால் படிப்போருக்கான அரங்கமாகவும் மாற்றப்பட்டுள்ளன.
தரைதளத்தில், போட்டி தேர்வர்களுக்காக வைக்கப்பட்டிருந்த நுால்கள், இரண்டாம் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
வாசகர்களுக்கான நுால் அறை ஒன்று, கூட்ட அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை நேற்று, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

