UPDATED : செப் 28, 2024 12:00 AM
ADDED : செப் 28, 2024 11:25 AM
நடுவீரப்பட்டு:
பண்ருட்டி அருகே நடுவீரப்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. விளையாட்டில் இப்பள்ளி மாணவர்கள் ஆண்டுதோறும் சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால், மாணவர்கள் விளையாட்டு பயிற்சி பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டிற்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகளை நடத்திட கல்வித்துறை அதிகாரிகள் உத்திரவிட்டனர்.
கடந்த காலங்களில், பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இருந்தபோது, போட்டிகள் சிறப்பாக நடத்தபட்ட நிலையில், இந்த ஆண்டு, உடற்கல்வி ஆசிரியர் இல்லாத நிலையிலும், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருவிக்ரமன் ஒத்துழைப்போடு அனைத்து விளையாட்டு போட்டிகளையும் நடத்தி முடித்துள்ளனர்.
இருந்தும் மாணவர்களின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தவும், பயிற்சி அளிக்கவும் விளையாட்டு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.