பொறுமையை சோதிக்கும் 'டேப்' பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
பொறுமையை சோதிக்கும் 'டேப்' பள்ளி ஆசிரியர்கள் குமுறல்
UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:40 AM
சென்னை:
ஆசிரியர்களின் கல்வி செயல்பாடுகளுக்காக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்ட கையடக்க கணினி எனும் 'டேப்' மெதுவாக இயங்கி, அவர்களின் பொறுமையை சோதித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாறி வரும் கற்றல் - கற்பித்தல் சூழலுக்கு ஏற்ப, ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது. இதற்காக, கடந்த 2023 - 24ம் கல்வியாண்டில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, 79,723 கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கு படிப்படியாக விநியோகம் செய்யப்பட்டன.
இந்த புதிய கையடக்க கணினி, மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் சுய விபரங்களை, 'எமிஸ்' செயலியில் பதிவேற்றம் செய்வது, குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த வீடியோ காட்சிகளை காண்பிப்பது என, கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காக வழங்கப்பட்டது.
ஆனால், இந்த கையடக்க கணினிகள், தற்போது ஆசிரியர்களின் பொறுமையை சோதிக்கின்றன; இவை மிக மெதுவாக இயங்குகின்றன என, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
பள்ளிக்கல்வித் துறை வழங்கிய கையடக்க கணினிகள், மிகவும் மெதுவாக இயங்குகின்றன. வருகைப் பதிவை மேற்கொள்ளவே சிரமமாக இருக்கிறது. சில நேரங்களில் செயல்படாமல் நின்று விடுகின்றன.
எங்களின் பொறுமையை மிகவும் சோதிக்கின்றன. இதனால், அவற்றை பயன்படுத்தாமல், எங்கள் மொபைல் போனை பயன்படுத்து கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.