திறந்தநிலை பள்ளி பிளஸ் 2 வகுப்பில் தமிழ் வழி கல்வி விரைவில் அறிமுகம்
திறந்தநிலை பள்ளி பிளஸ் 2 வகுப்பில் தமிழ் வழி கல்வி விரைவில் அறிமுகம்
UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:41 AM
சென்னை:
'தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் 2 வகுப்புக்கு விரைவில் தமிழ்வழி கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது' என, தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.
மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும், என்.ஐ.ஓ.எஸ்., எனும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம், மூன்று, ஐந்து, எட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை இணைந்து, நான்கு புதிய படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா, பல்கலை பொறுப்பு துணைவேந்தர் நரேந்திரபாபு ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
அகிலேஷ் மிஷ்ரா அளித்த பேட்டி:
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சார்பில், 10ம் வகுப்புக்கு 39 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை, தமிழ் உட்பட 19 மொழிகளில், மாணவர்கள் படிக்கலாம். பிளஸ் 2 வகுப்புக்கு, 44 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பாடங்கள், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி, உருது, பெங்காலி, குஜராத்தி, ஒடியா ஆகிய ஏழு மொழிகளில் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்வழிக் கல்வி, பிளஸ் 2 வகுப்பில் துவக்கப்படும். தற்போது, தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லுாரியுடன் இணைந்து, கோழி வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு தொடர்பாக இரண்டு சான்றிதழ் படிப்புகள், உணவு மற்றும் பானம், பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு ஆகியவை தொடர்பான டிப்ளமா படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.