மெல்ல கற்கும் 3,500 மாணவர்களை 'கரையேற்ற' சிறப்பு வகுப்பு துவக்கம்
மெல்ல கற்கும் 3,500 மாணவர்களை 'கரையேற்ற' சிறப்பு வகுப்பு துவக்கம்
UPDATED : ஜன 14, 2026 02:19 PM
ADDED : ஜன 14, 2026 02:22 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் மெல்ல கற்கும் 3,500 மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க, ஒன்பது மையங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி என, இரண்டு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, 10ம் வகுப்பில் 440 அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கடந்தாண்டு பொதுத் தேர்வு எழுதிய 31,305 மாணவர்களில், 28,049 பேர் தேர்ச்சி பெற்றனர். இவற்றில், 225 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய, 16,103 பேரில், 13,658 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம், 84.72.
பிளஸ் 2 பொது தேர்வில், 2025ம் ஆண்டு 244 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 27,558 பேரில், 25,212 பேர் தேர்ச்சி பெற்றனர். இவற்றில், அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய 12,599 பேரில், 10,882 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 86.37.
இதில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறாதோர் அதிகளவில் இருந்தனர்.
மாநில அளவில் தேர்ச்சி சதவீதமும், குறைவாக இருந்தது. இதையடுத்து, நடப்பு 2025 - 26ம் ஆண்டில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க கலெக்டர் பிரதாப், மெல்ல கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்த, மாவட்ட பள்ளி கல்வி துறையினருக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், 3,500 பேர் மெல்ல கல்வி கற்கும் திறன் கொண்டவர்கள் என கண்டறிந்தனர். அவர்களுக்கு, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட ஒன்பது மையங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகள், கடந்த வாரம் துவங்கியது.
இதுகுறித்து, கல்வி துறை அதிகாரி கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயில்வோரில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் விபரம், ஆசிரியர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 38 பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களாக, 3,500 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களை, வரும் அரசு பொதுத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட ஒன்பது மையங்களில் சிறப்பு வகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, மெல்ல கற்கும் மாணவர்களை, பள்ளிகளில் இருந்து பயிற்சி வகுப்பு வரை அழைத்துச் சென்று, மீண்டும் பள்ளிகளில் விட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்போருக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு தெரிவித்தார்.

