UPDATED : நவ 26, 2024 12:00 AM
ADDED : நவ 26, 2024 08:09 AM
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் பள்ளி மாணவர்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தை உணராது பயணிக்கும் போக்குள்ளது.
இம்மலைப்பகுதியில் ஏராளமான பள்ளிகள் செயல்படும் நிலையில் பஸ் வசதியில்லாத கிராமங்களில் உள்ள மாணவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இலைமறை காயாக இத்தகைய சூழல் இருந்த நிலை மாறி நேற்று கொடைக்கானல் மெயின் ரோட்டில் மாணவர்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
பெருமாள்மலை தனியார் பள்ளி வேன் பழுதானதால் பேத்துப்பாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட பிற பகுதி மாணவர்கள் செல்ல மாற்று ஏற்பாடாக பள்ளி சார்பில் சரக்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தில் பயணிப்பது தவறு என்ற சூழலில் பள்ளி நிர்வாகமே சரக்கு வாகனத்தை ஏற்பாடு செய்தது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது . கண்காணிப்பில்லாத கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கு விபத்திற்குதான் வழி வகுக்கும். இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.