மாணவர்கள் சவால்களை சந்திக்க தயாராக இருக்கணும்: ராஜாராம் பேச்சு
மாணவர்கள் சவால்களை சந்திக்க தயாராக இருக்கணும்: ராஜாராம் பேச்சு
UPDATED : மார் 13, 2025 12:00 AM
ADDED : மார் 13, 2025 09:18 AM
கோவை:
மாணவர்கள் சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என தமிழக லோக்ஆயுக்தா முன்னாள் தலைவர் ராஜாராம் பேசினார்.
யூத் பார் நேஷன் கோவை மண்டல அமைப்பு சார்பில், கோவை இளைஞர்கள் மாநாடு பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடந்தது.
யூத் பார் நேஷன் அமைப்பு, ராணுவத்தின் முன்னாள் வீரர்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் உருவாக்கப்பட்டது. அமைப்பு சார்பில், இளைஞர்களின் நலனுக்காக, கோவை இளைஞர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
மாநாட்டில், தமிழக லோக் ஆயுக்தா முன்னாள் தலைவர் ராஜாராம் பேசியதாவது:
இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதாரத்தில் வளமிக்க நாடாக மாறி வருகிறது. கல்லுாரி காலத்தில் ஏராளமான நண்பர்கள் கிடைப்பர். அவர்களுடன் இணைந்து முன்னேற வேண்டும். உங்கள் கனவுகள் அனைத்தையும் நனவாக்க வேண்டும்.
எதிர்மறை எண்ணங்கள் இருக்கக்கூடாது. கல்வி என்பது முக்கியமான ஒன்று. நம் தேசத்தின் விடுதலை மிகச்சிறந்த தலைவர்களால் பெறப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாட்டுப்பற்று வேண்டும். வெற்றியை பெற கடின உழைப்பு, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை ஆகியவை தேவை.
தீயில் இடப்படும் தங்கம் தான் ஆபரணமாக மாறும். அதுபோல நீங்களும் கஷ்டப்பட்டால் தான் வெற்றி பெற முடியும். வெற்றி பெற கால தாமதம் ஏற்படலாம். தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் வெற்றி கட்டாயம். சவால்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஒரே இரவில் வெற்றி வராது.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக, யூத் பார் நேஷன் மண்டல தலைவர் மேஜர் ராஜிவ் கிருஷ்ணன் வரவேற்றார். பி.எஸ்.ஜி., மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், அமைப்பின் தேசிய தலைவர் சதுர்வேதி, தேசிய செயல் தலைவர் சவுகான், கோவை மண்டல தலைவர் பாலாஜி, செயலாளர்கள் கிருஷ்ணன், சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டி, வினாடி-வினா போட்டிகள் நடந்தன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.